செய்திகள்
பாளை மத்திய ஜெயில் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

பாளை சிறையில் வாலிபரை அடித்துக்கொன்ற 7 கைதிகள் மீது வழக்கு - நீதிபதி நேரில் சென்று விசாரணை

Published On 2021-04-23 10:52 GMT   |   Update On 2021-04-23 10:55 GMT
பாளை சிறையில் வாலிபரை அடித்துக்கொன்ற 7 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமனோ (வயது 27).

இவர் சமீபத்தில் களக்காட்டில் காதல் தகராறில் பிளஸ்-2 மாணவர் ஒருவரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இவர் மீது முறப்பநாடு உள்பட பல்வேறு போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இவர் கூலிப்படையாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இவரை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைத்து இருந்தனர். அங்கு முத்து மனோவுக்கும் மற்றொரு தரப்பு கைதிக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், சிறை அதிகாரிகள் அவரை பாளை சிறைக்கு மாற்ற உத்தரவிட்டனர்.

அப்போது முத்து மனோவுடன் சிறையில் அடைக்கப்பட்ட அவரது நண்பர்கள் அருள்துரைசிங், மாதவன், சந்திரசேகர் ஆகியோரையும் பாளை சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று போலீசார் முத்து மனோ மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் பாளை சிறைக்கு கொண்டு வந்தனர். பாளை சிறையில் அவர்களை அடைத்த சிறிது நேரத்தில், அங்குள்ள சில கைதிகள் கும்பலாக கூடி முத்துமனோவை தாக்க தொடங்கினர். இதற்கு அவரது நண்பரகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் சில குறிப்பிட்ட கைதிகள் ஒன்று சேர்ந்து முத்துமனோவையும், அவரது நண்பர்களையும் தாக்கி உள்ளனர். அப்போது முத்து மனோவின் தலையில் சிலர் கல்லால் தாக்கி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு சிறைகாவலர்கள் விரைந்து சென்று தடியடி நடத்தி கைதிகளை விரட்டி காயமடைந்தவர்களை மீட்டனர். பலத்த காயம் அடைந்த முத்துமனோவை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மற்றவர்களை ஜெயில் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பாளை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற முத்துமனோ நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக பாளை மத்திய சிறை ஜெயிலர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி பாளை சிறையில் பல்வேறு வழக்கில் அடைக்கப்பட்டு இருந்த கைதிகளான ஜேக்கப், தாழையூத்து, ராமமூர்த்தி, வடக்கு தாழையூத்து, மகாராஜன் என்ற ஏ.டி.எம்., மேலகுளம், மாடசாமி (எ)மகேஷ், பல்லிக்கோட்டை, சந்தனமாரிமுத்து (எ) வெயிலுகுமார் (22), தாழையூத்து, கண்ணன் (எ)கந்தசாமி, வெள்ளூர், அருண்குமார், திருக்குறுங்குடி ஆகிய 7 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இவர்களை இன்று பெருமாள்புரம் போலீசார் சிறைவளாகத்திலேயே, இந்த கொலை வழக்கில் கைது செய்வதாக ஆவணங்களில் கையெழுத்து வாங்க உள்ளனர்.

சிறை வளாகத்திலேயே கைதி அடித்து கொலை செய்யப்பட்டதால், நெல்லை ஜே.எம்.1-வது நீதிபதி பாபு இன்று நேரில் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்துகிறார். நெல்லை கோட்டாட்சி தலைவர் சிவகிருஷ்ணமூர்த்தியும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகிறார்.

ஜெயில் கைதி முத்துமனோ கொலை தொடர்பாக நேற்று வாகைகுளத்தில் அவரது உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் இன்று பாளை மத்திய ஜெயில் முன்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

இதனால் பாளை ஜெயில் முன்பு இன்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News