செய்திகள்
கொரோனா வைரஸ்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் கொரோனா பாதிக்காது- கிண்டி கிங் ஆஸ்பத்திரி இயக்குனர்

Published On 2021-04-23 10:16 GMT   |   Update On 2021-04-23 10:16 GMT
வீட்டை விட்டு வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதற்கு மேலாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதுகாப்பாக இருக்கலாம்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலையின் வேகம் தீவிரமடைந்து உள்ளது. நாளுக்குநாள் தொற்று அதிகரித்து மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன.

இது குறித்து கிண்டி கொரோனா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் நாராயணசாமி அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: கொரோனா 2-வது அலையின் அறிகுறிகள் மாறி உள்ளதா?

பதில்: ஆரம்பத்தில் காய்ச்சல், இருமல், சளி, தலைவலி, உடல்வலி போன்றவை கொரோனாவுக்கான அறிகுறிகளாக இருந்தன. இப்போது அறிகுறிகளின் தன்மை மாறி இருக்கிறது.

வயிற்றுவலி, வாந்தி, தோல் தடிப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளோடு வருபவர்களுக்கும் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

முதல் அலை தொற்று போல் இல்லாமல் 2-ம் அலை தொற்று குடும்பத்தில் உள்ள எல்லோரையும் பாதிக்கிறது என்கிற கருத்து நிலவுகிறது. இதுவும் கூட மிகைதான். முதல் அலையை விட 2-ம் அலை தாக்குதலில் குடும்ப பாதிப்பு குறைவாகவே உள்ளது.

ப: முதல் அலை தொற்று 20 வயதுக்கு உட்பட்டவர்களை பெரிய அளவில் பாதிக்கவில்லை. 2-ம் அலை தொற்று குழந்தைகளையும் பாதிக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. எங்கள் அனுபவத்தில் இது உண்மை இல்லை.

கொரோனா 2வது அலையிலும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த தொற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் பரவல் சதவீதம் அதிகமாக உள்ளது.

குழந்தைகள் விசயத்தில் பயப்பட தேவையில்லை. பொது இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லாமல் சத்தான உணவு கொடுத்து பார்த்துக்கொண்டால் எந்த பிரச்சினைகளும் குழந்தைகளுக்கு வராது.

கே: கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆயுதம் என்ன?

ப: முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினி ஆகிய மூன்றும் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன. இதனை பொது இடங்களிலும், மத கூட்டங்களிலும், திருவிழா மற்றும் குடும்ப விழா நிகழ்ச்சிகளில் பின்பற்றினால் பாதுகாப்பாக இருக்கலாம்.

வீட்டை விட்டு வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதற்கு மேலாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதுகாப்பாக இருக்கலாம்.

நமது அன்றாட வாழ்க்கையில் இதனை பின்பற்றினால் கொரோனா தொற்றை விரட்டலாம்.

கே: கொரோனா எல்லா வயதினரையும் பாதிக்க காரணம் என்ன?

ப: உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது நோய் தொற்றுக்கான காரணம் ஆகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கொரோனா தொற்று பரவாது.

பாரபட்சமின்றி எல்லா வயதினரையும் இது பொதுவாக பாதிக்கும். அதனால் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

கே: முதல் அலையை விட 2-வது அலையில் பாதிப்பு அதிகமாக இருப்பது ஏன்?

ப: கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியபோது முழு ஊரடங்கு மாத கணக்கில் போடப்பட்டது. இதனால் அனைத்து பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. மக்கள் நடமாட்டம் கிடையாது.

ஆனால் தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் பாதிப்பு அதிகமாக தெரிகிறது. அதிக விழிப்புணர்வு ஏற்பட்டதோடு பரிசோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன. அதனால் தொற்று பரவல் அதிகமாக தெரிகிறது.



கே: இன்னும் எவ்வளவு காலம் முகக்கவசம் அணியவேண்டும்?

ப: தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முகக்கவசம் அணிவது நல்லது. இதற்கான கால அளவை இப்போது சொல்ல முடியாது. முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா மட்டுமின்றி அலர்ஜி, ஆஸ்துமா போன்ற பிற நோய் தொற்றில் இருந்தும் பாதுகாத்து கொள்வது கூடுதல் நன்மையாகும்.

கே: காய்ச்சல், தலைவலிக்கு மருந்துகடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிடுவதால் தொற்று அதிகரிக்கிறதா?

ப: தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகில் உள்ள மருந்து கடைகளுக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிடுவது தவறான முறையாகும். இதனை தவிர்க்க வேண்டும்.

இதனால் தொற்று பரவி இருந்தாலும் கூட மாத்திரை சாப்பிடுவதன் மூலம் அப்போது நிவாரணம் கிடைத்தாலும் நாம் வெளியே செல்லும்போது மற்றவர்களுக்கு இந்நோய் பரவக்கூடும்.

அதனால் லேசான அறிகுறி தெரிந்தவுடன் பரிசோதனை செய்துகொண்டால் நோய் முற்றி உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

கே: ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுவது ஏன்?

ப: ஒரு முறை கொரோனா தொற்று வந்து குணமாகி சென்ற சிலர் இரண்டாம் முறை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் உடலில் வைரசின் தாக்கம் இருக்கும். குறைந்தது 15 நாட்களாவது அவர்கள் ஓய்வில் தனியே இருக்க வேண்டும். சத்தான உணவு சாப்பிட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் உடலில் இருக்கும் வைரஸ் மேலும் ஊக்கமடைந்து 2-வது முறை தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இது மிகவும் குறைவு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News