செய்திகள்
காய்கறிகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை வீழ்ச்சி

Published On 2021-04-23 07:25 GMT   |   Update On 2021-04-23 07:25 GMT
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சில்லரை வியாபாரிகள் அதிகளவில் வராததால் கத்தரிக்காய், வெண்டைக்காய், கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்துள்ளது.
போரூர்:

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங் களில் இருந்தும் தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 380 லாரிகளில் காய்கறி விற்பனைக்கு குவிந்தது. தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் சில்லரை வியாபாரிகள் வரத்து குறைந்தது. இதனால் காய்கறி விற்பனை மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் வரத்து குறைவு காரணமாக முருங்கைக்காய் விலை திடீரென அதிகரித்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளதால் விலை படிப்படியாக குறைந்தது.

முருங்கைக்காயின் விலை இன்று மேலும் குறைந்து கிலோ ரூ.10-க்கு விற்கப்படுகிறது.



இதேபோல் காய்கறி விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தக்காளி, கேரட் கிலோ ரூ.6-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.10-க்கும் விற்கப்பட்டது.

மொத்த விற்பனையில் ரூ.80-க்கு விற்ற ஒரு பெட்டி (14 கிலோ) தக்காளி பின்னர் ரூ.60-க்கும், கேரட் 50 கிலோ மூட்டை ரூ.250-க்கும், முட்டைகோஸ் 90 கிலோ மூட்டை ரூ.250-க்கும், ரூ.10-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் பின்னர் ரூ.5-க்கும் விலை குறைத்து விற்கப்பட்டது.

அதையும் வாங்கி செல்ல சில்லரை வியாபாரிகள் அதிகளவில் வரவில்லை. இதன் காரணமாக கத்தரிக்காய், வெண்டைக்காய், கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்துள்ளது.

இதுகுறித்து மொத்த வியாபாரி சுகுமார் கூறும்போது, “இரவு நேர ஊரடங்கு காரணமாக தினசரி மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் வியாபாரிகள் தற்போது 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வருகின்றனர்.

அதேபோல் சிறு மொத்த விற்பனை கடைகளும் சுழற்சி முறையில் செயல்பட்டு வருவதால் காய்கறி மொத்த விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது” என்றார்.


Tags:    

Similar News