செய்திகள்
பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுக்க வந்த காட்சி.

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் புகார்

Published On 2021-04-22 13:04 GMT   |   Update On 2021-04-22 13:04 GMT
திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி வரை மோசடி நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
திருச்சி:

திருச்சி காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லூரை சேர்ந்தவர் மலர்விழி. இவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று பகல் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், “எங்கள் பகுதியை சேர்ந்த பெண் உள்பட 4 பேர் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்து விட்டனர். ஆகவே இது குறித்து விசாரித்து எங்கள் பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

இது குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-

ஒவ்வொருவரும் தலா ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் என பல்வேறு தொகைகளில் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டியுள்ளோம். மேலும், தீபாவளி சீட்டு நடத்தியும் பணம் வசூலித்தனர். கடந்த 7 ஆண்டுகளாக சீட்டு சேர்ந்து வந்தோம். இது தவிர, திருமணம் நிகழ்ச்சிகளுக்கு செல்வதாக கூறி அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களிடம் நகைகளையும் வாங்கி சென்றனர். 

எங்களிடம் குடும்ப உறுப்பினர்களை போல் பழகியதால் தான் நம்பினோம். ஆனால் கடைசியில் ரூ.2 கோடி அளவுக்கு பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். பாதிக்கப்பட்ட நாங்கள் ஏற்கனவே 3 மாதத்துக்கு முன்பு காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News