செய்திகள்
நெல்லையில் திருமண தேதி மாற்றம் அறிவிப்பு குறித்து வைக்கப்பட்டுள்ள பேனர்

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு- தேதி மாற்றி வைக்கப்படும் திருமணங்கள்

Published On 2021-04-22 10:24 GMT   |   Update On 2021-04-22 10:24 GMT
நெல்லை மாவட்டத்தில் உறவினர்கள் வசிக்கும் பகுதிகளில் திருமணம் மாற்றி அமைக்கப்பட்டது குறித்து பேனர்கள் வைத்து வருகின்றனர்.
நெல்லை:

கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இரவு நேர கட்டுப்பாடுகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் செய்வது அறியாமல் இருந்து வந்தனர். ஆனால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திருமணங்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தி கொள்ள அரசு அனுமதி வழங்கியது.

ஆனாலும் ஊரடங்கு நாளில் திருமணம் வைத்தால் பெரும்பாலான இடங்களில் இருந்து உறவினர்கள் வர முடியாது என்பதால் திருமணங்களை மாற்றி அமைத்து வருகின்றனர். நெல்லையிலும் ஏராளமான திருமணங்கள் வேறு நாட்களுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

வருகிற 25-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் ஏராளமான திருமணங்கள் நடக்க இருந்தது. கோவில்களிலும், தேவாலயங்களிலும் திருமணங்களுக்கு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு இருந்தது. மண்டபங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது முன்பதிவு செய்திருந்த ஏராளமானோர் மறுநாள் அதாவது 26-ந்தேதி(திங்கள் கிழமை) மாற்றி வைத்துள்ளனர்.

இதனை உறவினர்கள் அறியும் வண்ணம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும், உறவினர்கள் வசிக்கும் பகுதிகளில் திருமணம் மாற்றி அமைக்கப்பட்டது குறித்து பேனர்களும் வைத்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட திருமணங்களுக்கு கலெக்டர் விஷ்ணு அனுமதி அளித்து உத்தரவிட்டு இருந்தாலும், பொதுமக்கள் பெரும்பாலானோர் திருமண தேதியை மாற்றி அமைத்து வருகின்றனர்.



Tags:    

Similar News