செய்திகள்
கோப்புப்படம்

விழுப்புரம் மாவட்டத்தில் 2 அரசு மருத்துவமனைகள் கொரோனா வார்டாக மாற்றம்

Published On 2021-04-22 00:00 GMT   |   Update On 2021-04-22 00:00 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் 2 அரசு மருத்துவமனைகள் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் 4 தனிமைப்படுத்தும் மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு நாளும் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக விக்கிரவாண்டி அரசு மருத்துவமனை, வானூர் அரசு மருத்துவமனை ஆகிய 2 அரசு மருத்துவமனைகள் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா நோயாளிகள் 641 பேரில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 460 பேரும், விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 84 பேரும், விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையில் 48 பேரும், வானூர் அரசு மருத்துவமனையில் 25 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 24 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கு வசதியாக விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியும், அரசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியும் தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதில் விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு 67 பேரும், அரசூரில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு தற்போது 13 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் 100 படுக்கை வசதிகளுடன் வளத்தியில் உள்ள போலீஸ் குடியிருப்புகளையும், வானூரை அடுத்த புளிச்சப்பள்ளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடனும் என 2 தனிமைப்படுத்தும் மையங்களை உருவாக்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News