செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் அருகே சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட 41 மதுபாட்டில்கள் பறிமுதல்

Published On 2021-04-21 11:03 GMT   |   Update On 2021-04-21 11:03 GMT
திருப்பூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த டாஸ்மாக் பார் ஊழியர்களிடமிருந்து விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தாராபுரம்:

தமிழகத்தில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். தடையை மீறி கடைகள் திறந்துவைப்பது மற்றும் வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்திலும் போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் வைத்தும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி கடைகள் திறக்கப்பட்டுள்ளதா? என்பதையும் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தாராபுரம் 5 முக்கு சாலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு பிரிவிற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், போலீசார் சண்முகம், சிவபாரத் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது தடையை மீறி மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த டாஸ்மாக் பார் ஊழியர்களிடமிருந்து விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த கார்த்தி, ராமநாதபுரம் கடலாடியை சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்தது. இதேபோல் தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கப்படுவதாக மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற மதுவிலக்கு போலீசார் தென்னை மரத்தில் கள்ளுக்காக கட்டிருந்த பானையை உடைத்து கள் இறக்கியவரை எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

Similar News