செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்துள்ள எலுமிச்சை

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு எலுமிச்சை வரத்து குறைந்தது

Published On 2021-04-21 07:20 GMT   |   Update On 2021-04-21 07:20 GMT
தற்போது கோடைகாலம் என்பதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது.
போரூர்:

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் கூடூர், நெல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழங்கள் அதிக அளவில் வருகின்றன.

மேலும் தமிழகத்தின் சங்கரன்கோவில், தென்காசி ஆகிய ஊர்களில் இருந்து எலுமிச்சை பழங்கள் வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக தினமும் 10 லாரிகளில் எலுமிச்சை வருவது வழக்கம். தற்போது விளைச்சல் பாதிப்பு காரணமாக தினமும் 5 லாரிகளில் மட்டுமே எலுமிச்சை வருகிறது.

இதன்காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு மொத்தவிலை மார்க்கெட்டில் முதல் ரக எலுமிச்சை 1 கிலோ ரூ.80-க்கும், 2-வது ரகம் 1 கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகிறது.

சில்லரை மார்க்கெட்டில் எலுமிச்சை முதல் ரகம் கிலோ ரூ.100-க்கும், 2-வது ரகம் கிலோ ரூ.70-க்கும் விற்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு சில்லரை மார்க்கெட்டில் 1 கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது.

தற்போது ரூ.100 ஆக குறைந்துள்ளது. வருகிற ஜூன் மாதத்துக்கு பிறகு எலுமிச்சை வரத்து அதிகரிக்கும். அதன்பிறகு விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கோடைகாலம் என்பதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், காரனோடை, செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் இருந்து தர்பூசணி கொண்டுவரப்படுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமும் 30 லாரிகளில் தர்பூசணி வந்தது. தற்போது தினமும் 40 லாரிகளில் தர்பூசணி வருகிறது.

கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் 1 கிலோ தர்பூசணி ரூ.10-க்கு விற்கப்படுகிறது. சில்லரை மார்க்கெட்டில் 1 கிலோ ரூ.15-க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட்டில் தர்பூசணி மொத்த வியாபாரி வடிவழகன் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 40 லாரிகளில் தர்பூசணி கொண்டுவரப்படுகிறது. தற்போது கொரோனா 2-வது அலை பரவி வருவதால் தர்பூசணி வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதன் காரணமாக தினமும் 5 முதல் 6 லாரி தர்பூசணி விற்பனையாகாமல் தேக்கம் அடைகிறது. எனவே வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது விளைச்சல் ஓரளவு இருந்தாலும் கொரோனா மீண்டும் பரவி வருவதால் தர்பூசணி விளைவித்த வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News