செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

Published On 2021-04-20 18:05 GMT   |   Update On 2021-04-20 18:05 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் கூறினார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள காப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் 180 கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டு வேட்பாளர்களின் முகவர்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்கனவே மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு காணொலி காட்சி மூலம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் நல்லது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிகமாக அபராதம் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது 80 சதவீதம் பேர் முககவசம் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. தினமும் சராசரியாக 1000 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏதும் இல்லை. இன்றைய நிலவரப்படி 5 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்து கையிருப்பில் உள்ளது. மேலும், நெல்லை மற்றும் மதுரையில் உள்ள குளிர்பதன கிடங்கில் தேவையான தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டு உள்ளன. அங்கிருந்து நமது தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் எடுத்துவர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி தடுப்பூசி போடுவதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உடன் இருந்தார்.
Tags:    

Similar News