செய்திகள்
கொலை

ஒரத்தநாடு அருகே விவசாயி கொலை- பட்டறை தொழிலாளி கைது

Published On 2021-04-20 08:04 GMT   |   Update On 2021-04-20 08:04 GMT
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கத்தியால் குத்தி விவசாயி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பட்டறை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் மெயின் ரோட்டில் செல்வம் என்பவருக்கு சொந்தமான வாள்பட்டரை உள்ளது. இந்த பட்டறையை அவர் மன்னார்குடியை சேர்ந்த பிரகாசுக்கு குத்தகைக்கு விட்டுள்ளார்.

இந்த கடையில் அம்மாபேட்டையை சேர்ந்த சூசைராஜ் (வயது 34) என்பவர் வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் அதே பகுதியில் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று இரவு சூசைராஜ் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியை திட்டி அடித்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற புதூர் வடக்கு தெருவை சேர்ந்த விவசாயியான ராஜேந்திரன் (60) எதற்காக இப்படி போட்டு அடிக்கிறாய்? என தட்டி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றவே சூசைராஜ் ஆத்திரம் அடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேந்திரனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூசைராஜை கைது செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 
Tags:    

Similar News