செய்திகள்
முககவசம்

கோவை மாநகரில் அதிரடி சோதனை: முககவசம் அணியாதவர்களிடம் ரூ.99 லட்சம் அபராதம் வசூல்

Published On 2021-04-19 06:51 GMT   |   Update On 2021-04-19 06:51 GMT
பொதுமக்கள் முககவசம் அணிந்து வெளியே செல்கிறார்களா? சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என கண்காணிக்க கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது

கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

பொதுமக்கள் முககவசம் அணிந்து வெளியே செல்கிறார்களா? சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என கண்காணிக்க கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் கோவை மாநகர போலீசாருடன் இணைந்து அரசின் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். அதன்படி முககவசம் அணியாதவர்களுக்கு ரூ. 200, சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு ரூ.500 என அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

நேற்று ஒரே நாளில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் 1,700 பேர், கிழக்கு மண்டலத்தில் 6,300 பேர், மேற்கு மண்டலத்தில் 3,400 பேர் என மொத்தம் 11,400 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை கோவை மாநகராட்சி பகுதிகளில் அரசின் கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ. 99 லட்சத்து 17 ஆயிரத்து 355 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை கோவை மாநகரில் உள்ள முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் முககவசம் அணியால் சென்றவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News