செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா கட்டுப்பாடுகளால் ஓட்டல் தொழில் மீண்டும் பாதிப்பு

Published On 2021-04-19 06:39 GMT   |   Update On 2021-04-19 06:39 GMT
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பில் இருந்து இப்போது தான் மீண்டு வந்த நிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் ஓட்டலுக்கு வர தயங்குகிறார்கள்.

சென்னை:

கொரோனா கட்டுப்பாடுகளால் ஓட்டல் தொழில் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே ஓட்டல்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவை மதித்து சென்னையில் உள்ள அனைத்து ஓட்டல்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் செயல்படாது என்று ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:-

ஓட்டல் தொழில் ஏற்கனவே 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் மேலும் 25 சதவீதம் தொழில் பாதிக்க கூடும்.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பில் இருந்து இப்போது தான் மீண்டு வந்த நிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் ஓட்டலுக்கு வர தயங்குகிறார்கள்.

பயத்தின் காரணமாக ஓட்டலில் அமர்ந்து சாப்பிட ஆர்வம் காட்டவில்லை. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

வியாபாரம் இல்லாததால் ஓட்டல் தொழிலாளர்களும் வேலையில்லாமல் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். தொழில் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க முடியவில்லை.

அதனால் அவர்கள் ஒரு மாதம் சொந்த ஊர்களுக்கு சென்று வருவதாக கூறி புறப்பட்டு செல்கின்றனர். வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் ஓட்டல்களில் அதிக அளவு வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதால் ஓட்டல்களில் வந்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைவதோடு பார்சல் விற்பனையும் குறைந்து வருகிறது.

கடந்த ஆண்டு 1500 ஓட்டல்கள் மூடப்பட்டன. இந்த நிலை நீடித்தால் மேலும் பல ஓட்டல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மூடக்கூடிய நிலைக்கு தள்ளப்படும். எனவே அரசு ஓட்டல் தொழில் நடத்தக்கூடியவர்களுக்கு இப்படிப்பட்ட சூழ்நிலையில் உதவ முன்வர வேண்டும்.

ஜி.எஸ்.டி., கட்டிட வாடகை, வங்கி கடன் போன்றவற்றில் விலக்கு சலுகை அளிக்க வேண்டும். அப்போது தான் ஓட்டல் தொழிலை காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News