செய்திகள்
அரசு பஸ்கள்

தென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்

Published On 2021-04-19 05:11 GMT   |   Update On 2021-04-19 08:57 GMT
தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக இரவு 10 மணிக்குள் சம்பந்தப்பட்ட இடத்தை சென்று சேரும் வகையில் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை:

நாடுமுழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் நாளை (20-ந்தேதி) முதல் இரவுநேர ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள், அரசு பஸ்கள், வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்களும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவுநேர பஸ்களுக்கு தடை விதிக்கப்படுவதால் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து நீண்ட தூரம் செல்லும் பஸ்கள் இரவு நேரத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் மாலை மற்றும் இரவு நேரங்களிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த இடங்களுக்கு செல்ல பயணநேரம் 10 மணி முதல் 12 மணிநேரம் வரை ஆகும். இரவு நேரத்தில் பஸ் போக்குவரத்துக்கு தடை இருப்பதால் இந்த பஸ்களை காலை நேரத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிலும் காலை நேரத்தில் கூடுதலாக பஸ்களை விட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். வெளி மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு இரவு 8 மணிக்குள் சென்று சேரும் வகையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

உதாரணமாக சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல பயண நேரம் 5 மணி நேரம் ஆகும் நிலையில் காலையில் இருந்து மாலை 3 மணிவரை மட்டுமே சென்னையில் இருந்து திருச்சிக்கு பஸ்கள் இயக்கப்படும். மாலை 3 மணிக்கு புறப்படும் பஸ் இரவு 8 மணிக்குள் திருச்சியை அடைந்துவிடும்.

இதேபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு பயண நேரம் 10 முதல் 12 மணி நேரம் வரை ஆகும் என்பதால் அதற்கேற்ப பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்களும் இரவு 8 மணிக்குள் அந்தந்த இடங்களை சென்று சேரும் வகையில் இயக்கப்பட உள்ளன.

தென் மாவட்டங்களுக்கு அதிகாலை 4 மணிமுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக நீண்ட தூர பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் இதற்கு முன்பு இரவு நேரங்களில் மட்டுமே பயணம் செய்து வந்தார்கள். இனி அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல பகல் நேரத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக இரவு 8 மணிக்குள் சம்பந்தப்பட்ட இடத்தை சென்று சேரும் வகையில் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.



இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பகல் நேரங்களில் இயக்கப்படுகின்ற பேருந்து சேவைகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்றுமாறும் அறிவுத்தப்பட்டுள்ளது.

அரசு விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. இந்த வசதியினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு உரிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யவேண்டும்.

மாநகர போக்குவரத்துக்கழகத்தை பொறுத்தமட்டில், பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், அரசு விதித்துள்ள இரவு ஊரடங்கினை பின்பற்றி அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 10 மணி வரையிலும், பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நெல்லை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் அடிக்கடி அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள்.

தினமும் நெல்லையில் இருந்து சென்னைக்கு 25 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரவு நேர ஊரடங்கு காரணமாக நாளை முதல் இந்த பஸ்கள் காலை நேரத்திலேயே இயக்கப்படுகின்றன.

அதிகாலை 5.30 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே நெல்லையில் இருந்து சென்னைக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லையில் இருந்து திருப்பதிக்கு காலை 7.30 மணிவரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படும்.
Tags:    

Similar News