செய்திகள்
கோப்புப்படம்

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: 12-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு- தமிழக அரசு அறிவிப்பு

Published On 2021-04-18 13:29 GMT   |   Update On 2021-04-18 13:29 GMT
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு, மேலும் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் வேகம் அதிகரித்ததால் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் அமல்படுத்த மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதைதொடர்ந்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நிபுணர் குழுவினருடன் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 2 தடவை ஆலோசனை நடத்தினார்.

அப்போது மருத்துவ குழுவினர் பல்வேறு புதிய பரிந்துரைகளை வழங்கினார்கள். குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வர கேட்டுக்கொண்டனர் இதையடுத்து புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 4 நாட்களாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

சேலத்தில் இருந்து சென்னை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் உடனடியாக எந்த அறிவிப்புகளையும் அவரும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் இன்று இரவு 6 மணியளவில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், வருகிற 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். 12-ம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது.

இரவு 9 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வைக்க அனுமதி. அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் மக்கள் செல்ல தடை, இரவு நேரங்கில் தனியார் வாகனங்கள் செல்ல தடை. கல்லூரி தேர்வுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடத்த வேண்டும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வைரஸ் தொற்றின் பரவல் பல மடங்கு வேகமாக உயர்ந்துள்ளது.

தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டிவிட்டது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது.

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தேர்தல் முடிந்த உடன் தீவிரப்படுத்தியது. சட்டமன்ற தேர்தல் 6-ந்தேதி முடிவடைந்த நிலையில் கடந்த 8-ந்தேதியன்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.



இதன்படி கடந்த 10-ந்தேதி முதல் ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவை 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும், துக்க நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே  பங்கு பெற வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
Tags:    

Similar News