செய்திகள்
சாலை விபத்து

சரக்கு ஆட்டோ - லாரி மோதிய விபத்தில் கைக்குழந்தை பலி

Published On 2021-04-17 21:41 GMT   |   Update On 2021-04-18 10:03 GMT
திருப்பூரில் சரக்கு ஆட்டோ-லாரி மோதிய விபத்தில் கைக்குழந்தை பரிதாபமாக இறந்தது. தாய், மகன் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
திருப்பூர்:

திண்டுக்கல் மாவட்டம் சிந்தலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவருடைய மனைவி ராதிகா (23). இவர்களுக்கு விதுனவ் (3) என்ற மகனும், பிறந்து 40 நாட்களே ஆன விஷ்வஜித் என்ற மகனும் இருந்தனர். விஜயகுமார் திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்த வருகிறார். மனைவி மற்றும் குழந்தைகள் ஊரில் இருந்துள்ளனர்.

இந்தநிலையில் பிச்சம்பாளையம் புதூரில் வாடகை வீட்டில் குடியேறுவதற்காக, சொந்த ஊரில் இருந்து வீட்டு சாமான்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ஆட்டோவில் ராதிகா, தனது மகன் விதுனவ், குழந்தை விஷ்வஜித் மற்றும் தாத்தா நாகராஜ் (60) ஆகியோருடன் திருப்பூருக்கு வந்துள்ளார். சரக்கு ஆட்டோவை டிரைவர் மணி (26) ஓட்டி வந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு சரக்கு ஆட்டோ திருப்பூர் குமார்நகர் பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு வந்து கொண்டு இருந்தது. அப்போது தனியார் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான லாரி அவினாசி ரோட்டில் இருந்து திருப்பூர் நோக்கி வந்துள்ளது. எதிர்பாராதவிதமாக லாரியும், சரக்கு ஆட்டோவும் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ராதிகா, கைக்குழந்தை விஷ்வஜித் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த கைக்குழந்தை விஷ்வஜித் பரிதாபமாக இறந்தான். காயமடைந்த ராதிகா, மகன் விதுனவ், நாகராஜ் ஆகியோர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயனை (28) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News