செய்திகள்
கோப்பு படம்.

கொரோனா பரவும் அபாயம்- சாலையில் சிதறி கிடக்கும் முககவசங்கள்

Published On 2021-04-17 12:28 GMT   |   Update On 2021-04-17 12:28 GMT
திருப்பூர் சாலைகளில் முககவசங்கள் ஆங்காங்கே கிடக்கிறது. அதில் தொற்றி இருக்கும் வைரஸ்கள் காற்றின் மூலம் பரவி பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா ஜெட் வேகத்தில் பரவ தொடங்கியுள்ளது. பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக கொரோனா பரவாமல் இருக்க ஒரே தீர்வு என்னவென்றால் அது முககவசம்தான். எனவே முககவசம் அனைவரும் அணிய வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருவதுடன், தனியார் நிறுவனங்கள் மற்றும் முக்கிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கை காரணமாக பொதுமக்களில் பெரும்பாலானோர் முககவசம் அணிய தொடங்கியுள்ளனர். இதனால் அவற்றின் விற்பனை கடந்த ஆண்டு போல் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் முககவசங்கள்,, காட்டன் துணியால் ஆன முககவசங்கள் உள்ளிட்ட விதவிதமான முககவசங்களை பொதுமக்கள் வாங்கி அணிந்து வருகின்றனர். இளம்பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளுக்கு ஏற்ப முககவசங்களை அணி கின்றனர்.

டாக்டர்களை பொறுத்தவரை ஒரு முறை பயன்படுத்தப்படும் முககவசங்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் தினமும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளதால் பெரும்பாலான வர்கள் காட்டன் துணியால் ஆனவற்றை வாங்கி அணி கின்றனர். ஒரு வருடமாக முககவசம் அணிந்திருந்த நிலையில் சற்று மூச்சு விடுவதற்காக முககவசத்தை கழற்றி வைப்பதற்குள் கொரோனா 2-ம் அலை வந்து மீண்டும் முககவசத்திற்கு மவுசை அதிகரித்து விட்டது.

இப்படி முககவசத்திற்கு ஒரு பக்கம் மவுசு அதிகரித்துள்ள நிலையில் மற்றொரு புறம் அதனால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. முககவசம் அணிந்திருந்தால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து காப்பாற்றப்படலாம்.

கொரோனா தொற்று யாருக்கு ஏற்பட்டுள்ளது என்பது உடனே தெரியாது. 15 நாட்களுக்கு பிறகுதான் அறிகுறி தெரிய ஆரம்பித்து அதன் பிறகே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறு கின்றனர். அதற்குள் அந்த நபர் பல்வேறு வெளி யிடங்களுக்கு சென்று சங்கிலி தொடர் போல் பலருக்கு வைரசை பரப்பி விடுகிறார்.

அவர் அருகில் நின்றவர் முககவசம் அணிந்திருந்தால் சற்று தப்பிப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஏனென்றால் தொற்றால் பாதிக்கப்பட்டவர் விடும் மூச்சு காற்றை முககவசம் முடக்கி விடும். முககவசம் அணியாதவர்கள் அதனை சுவாசித்து பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். இதனால் முககவசம் அணிய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.

அதே நேரம் முககவசம் பயன்படுத்துபவர்கள் ஒரு நாள் மட்டும் பயன்படுத்தி விட்டு அதனை குப்பை தொட்டி அல்லது தீ வைத்து எரித்து விட வேண்டும். மறுமுறை உபயோகிக்கும் முககவசமாக இருந்தால் நன்றாக துவைத்து விட்டு அணிய வேண்டும். இதன் மூலம் முககவசத்தில் படிந்திருக்கும் வைரஸ்கள் அழிந்து விடும்.

அதே நேரம் முக கவசத்தை குப்பை தொட்டியில் போடுவதற்கு பதில் சாலையிலோ அல்லது எங்காவது ஒரு மூலையிலோ போட்டால் அங்கு கொரோனா குடிகொண்டு விடும். அதனால் பாதிக்கப்படுபவர்கள் பலர். கடந்த ஆண்டு குப்பை தொட்டியில் போடப்பட்ட முககவசங்களை அகற்றிய போது அதன் மூலம் தூய்மை பணியாளர்கள் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். குப்பை தொட்டியில் போட்டதற்கே இந்த நிலை என்றால் வெளியில் கிடக்கும் முககவசத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும். இது போன்ற நிலை தற்போது திருப்பூர் மாவட்டத்தில் நிலவி வருகிறது. கொரோனா பரவலால் பலர் முககவசம் அணிந்து வரும் நிலையில், சிலர் முககவசத்தை சாலையில் வீசி செல்லும் அவல நிலை தொடர்கிறது.

குறிப்பாக திருப்பூர் குமரன் ரோடு, பல்லடம் சாலை, புதிய பஸ் நிலையம், அவினாசி ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் முககவசங்கள் ஆங்காங்கே கிடக்கிறது. அதில் தொற்றி இருக்கும் வைரஸ்கள் காற்றின் மூலம் பரவி பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே இதனை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அப்படி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News