செய்திகள்
அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்- 2 மாணவிகளுக்கு செய்முறைத் தேர்வு நடந்தபோது எடுத்த படம்.

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடக்கம் - சமூக இடைவெளியை பின்பற்றி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்

Published On 2021-04-17 09:32 GMT   |   Update On 2021-04-17 09:32 GMT
தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் நேற்று தொடங்கியது. இதில் சமூக இடைவெளியை பின்பற்றி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு 157 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை 9,742 மாணவர்கள், 9,498 மாணவிகள் என மொத்தம் 19,240 பேர் எழுத உள்ளனர். இந்த நிலையில் பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் அறிவியல் பாடப்பிரிவுகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்றனர். இதையொட்டி அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் உள்ள ஆய்வகங்களில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

செய்முறை தேர்வு எழுத பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். உடல் வெப்பநிலை சீராக இருக்கிறதா? என உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களுடைய கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் முக கவசங்கள் அணிந்தவாறு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு செய்முறை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். செய்முறை தேர்வு பணியை கல்வித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். வருகிற 23-ந்தேதி வரை பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் நடக்கிறது. அரூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகள் செய்முறை தேர்வில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News