செய்திகள்
நடிகர் விவேக்

நடிகர் விவேக் இதயம் பலவீனமாக இருந்ததால் எங்களது முயற்சிகளுக்குப் பலன் இல்லை - சிம்ஸ் மருத்துவமனை தகவல்

Published On 2021-04-17 03:32 GMT   |   Update On 2021-04-17 03:32 GMT
நடிகர் விவேக்கிற்கு பலவிதமான சிகிச்சை அளித்தும் இதயம் பலவீனமாக இருந்ததால் எங்களது முயற்சிகளுக்குப் பலன் இல்லை என சிம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயக்க நிலைக்கு சென்றார்.

உடனடியாக அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில்,  சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் மருத்துவர் ராஜு சிவசாமி தனியார் நிறுவன தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியதாவது:

நேற்று காலை 11 மணியளவில் நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். கொண்டு வரும்போது அவருக்கு நாடித்துடிப்பே இல்லை. உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட்டது. இதயத்திற்குச் செல்லும் இடதுபுற ரத்தக்குழாயில் 100% அடைப்பு இருந்தது. அதைக் கண்டுபிடித்து சிகிச்சை செய்தோம். 



எக்மோ செய்த பிறகுதான் இதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடிந்தது. பாதிப்பு தீவிரமாக இருந்ததால் உயிரிழக்க காரணம். விவேக்கிற்கு பலவிதமான சிகிச்சை அளித்தும் இதயம் பலவீனமாக இருந்ததால் எங்களது முயற்சிகளுக்குப் பலன் இல்லை. இந்த உடல்நலப் பிரச்சினை ஒரே நாளில் வராது. ரத்தக் கொதிப்புக்கு அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்ததாக அவரது தரப்பில் கூறப்படுகிறது என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News