செய்திகள்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

சாத்தான்குளம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் போராட்டம்

Published On 2021-04-16 19:37 GMT   |   Update On 2021-04-16 19:37 GMT
சாத்தான்குளம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே பழங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சடையன்கிணறு காலனியில் சுமார் 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த பத்து நாட்களாக மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி செயலர் திருவள்ளுவன், சாத்தான்குளம் ஒன்றிய செயலர் செந்தில்குமார், ஊராட்சி உறுப்பினர் கண்ணன் ஆகியோர் தலைமையில் நேற்று காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, சாத்தான்குளம் தாசில்தார் செல்வகுமார், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சிஅலுவலர் பாண்டியராஜ் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சடையன்கிணறு கிராமத்தின் மையத்தில் 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு, கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News