செய்திகள்
திருட்டு நடந்த வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு கிடப்பதை படத்தில் காணலாம்.

கந்திலி அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 7 பவுன் நகை, ரூ.7 லட்சம் திருட்டு

Published On 2021-04-15 14:55 GMT   |   Update On 2021-04-15 14:55 GMT
திருப்பத்தூர் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து 7பவுன் நகை மற்றும் ரூ.7 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
திருப்பத்தூர்:

கந்திலி ஒன்றியம் மோட்டூர் அருகே உள்ள முத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 52), இவர் பெங்களூருவில் புதிய வீடுகள் மற்றும் கட்டிடம் கட்டி விற்பனை செய்து வருகிறார். இதனால் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

மோட்டூர் அருகே உள்ள முத்தம்பட்டியில் உள்ள வீட்டுக்கு மாதம் ஒரு முறை மற்றும் விசேஷ நாட்களுக்கு வந்து செல்வது வழக்கம். இந்த வீட்டை இவரது மனைவியின் தம்பி ராமு பராமரித்து வருகிறார்.

இநத்நிலையில் கடந்த 6-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக முருகன் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார். முருகன் கந்திலி அருகே மாங்குப்பம் பகுதியில் திருமண மண்டபம் கட்டி வருகிறார். வேலையாட்களுக்கு கூலி கொடுப்பதற்காக பீரோவில் ரூ. 7 லட்சத்தை வைத்து சென்றுள்ளார்.

ராமு வழக்கம்போல நேற்று காலை வீட்டை சுத்தம் செய்ய வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, பெங்களூருவில் இருக்கும் முருகனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் 7 லட்சம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் கந்திலி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News