செய்திகள்
ராமதாஸ்

வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க பசுமை செயல் திட்டம் தேவை- ராமதாஸ் அறிக்கை

Published On 2021-04-15 09:41 GMT   |   Update On 2021-04-15 09:41 GMT
தமிழகம் முழுவதும் உள்ள பசுமைப் பகுதிகளையும், சதுப்பு நிலங்களையும் இனி அழிக்க மாட்டோம் என்று அரசு உறுதியேற்க வேண்டும்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சித்திரை பிறந்து விட்ட நிலையில், வெப்பநிலை 110 டிகிரி பாரன்ஹீட்டைக் கடந்து விட்டது. வீடுகளை விட்டு வெளியில் வந்து நடமாடவே முடியாது என்ற நிலை ஒருபுறம் இருக்க, வீடுகளுக்கு உள்ளேயேயும் இருக்க முடியாது என்ற அளவுக்கு வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தின் கடுமையில் இருந்து மக்களைக் காப்பதற்கான பசுமை செயல்திட்டத்தை செயல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கத்தால் தமிழ்நாடு இரு வழிகளில் பாதிக்கப்படுகிறது. முதலாவதாக காலநிலை மாற்றத்தின் பயனாக பூமியின் சராசரி வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது 1.5 டிகிரி என்ற அளவுக்கு உயரும். அதனால், வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். இரண்டாவதாக, வெப்பநிலை அதிகமாக இருந்தாலும் கூட, மரங்களின் எண்ணிக்கையும், பசுமைப் போர்வையின் பரப்பும் அதிகமாக இருந்தால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும்.



பசுமைப் பரப்பை உருவாக்குவது ஒருபுறமிருக்க, ஏற்கனவே உருவாக்கப்பட்ட பசுமைப் போர்வையை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தமிழகம் முழுவதும் உள்ள பசுமைப் பகுதிகளையும், சதுப்பு நிலங்களையும் இனி அழிக்க மாட்டோம் என்று அரசு உறுதியேற்க வேண்டும். அதுமட்டுமின்றி, நகரப்பகுதிகளில் உள்ள மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதை தடுக்க மரங்கள் ஆணையத்தை உரிய அதிகாரங்களுடன் உருவாக்க வேண்டும்.

வெப்பநிலையையும், வெப்பத்தின் தாக்கத்தையும் கட்டுப்படுத்துவது அரசின் கடமை மட்டுமே அல்ல. பொறுப்புள்ள குடிமக்களாகிய நமக்கும் அதற்கான கடமை உள்ளது. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் வீட்டுத் தோட்டங்கள் உள்ளிட்ட வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். நகர்ப்புற வீடுகள், கட்டிடங்களின் மேற்கூறைகளை வெள்ளை வண்ணத்திலும், சூரிய ஆற்றலை ஈர்க்காத முறையிலும் அமைப்பதன் மூலம் வீடுகளுக்குள் வெப்பத்தை கணிசமாக குறைக்க முடியும்.

அரசும், மக்களும், சமூக அமைப்புகளும் போட்டிப் போட்டுக் கொண்டு மரங்களை வளர்க்கத் தொடங்குவோம். நடப்பு பத்தாண்டில் இல்லா விட்டாலும், அடுத்த பத்தாண்டிலாவது வெப்பத்தின் கடுமை இல்லாமல் இதமான வெப்பநிலையில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கான பசுமை நடவடிக்கைகளை இந்த நிமிடத்திலிருந்து நாம் அனைவரும் தொடங்குவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News