செய்திகள்
கோப்புப்படம்

கட்டுப்பாட்டு அறை மூலம் கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க திட்டம்

Published On 2021-04-15 07:22 GMT   |   Update On 2021-04-15 07:22 GMT
கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது பின்பற்றப்பட்ட வழிமுறைகளை மீண்டும் கையாள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை:

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது பின்பற்றப்பட்ட வழிமுறைகளை மீண்டும் கையாள முடிவு செய்துள்ளது.

15 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறை அமைத்து கொரோனா தொற்று பரவுவதை தடுக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை அடுத்தவாரம் முதல் தொடங்க உள்ளது.

இதன் மூலம் கொரோனா தொற்று பரவலை முன் கூட்டியே கண்டுபிடித்து சிகிச்சைக்கு உட்படுத்த முடியும். இதன் மூலம் தொற்று பரவுவது முழுமையாக தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுப்பாட்டு அறையில் நியமிக்கப்படுகிற ஊழியர்கள் தொற்று பாதிப்பு உள்ளவர்களை போன் மூலம் தொடர்பு கொண்டு எப்படி தொற்று பரவியது என்பதை கேட்டறிவார்கள். அவர்கள் சென்ற இடம், யாருடன் தொடர்பு கொண்டார்கள் போன்ற விவரங்களை கேட்டறிவார்கள்.


அந்த தகவல்களின் அடிப்படையில் தொடர்பில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதற்காக தனி குழு ஒன்று மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குழுவில் உள்ளவர்கள் தொற்று பாதிப்பில் உள்ளவர்களோடு தொடர்புகொண்டவர்கள் யார்? யார்? என்ற விவரங்களை கேட்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தவும், பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுவார்கள்.

இதன்மூலம் நோய் தொற்று வீரியம் அடைந்து உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். தொடர்பில் உள்ளவர்களுக்கு தொற்று பாதிப்பு இருக்கிறதா என்பதை முன்கூட்டியே கண்டறியமுடியும்.

இந்த திட்டம் கடந்த ஆண்டு சிறப்பாக கை கொடுத்ததால் அதனை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல காய்ச்சல் முகாம்களும் விரைவில் நடத்தப்பட உள்ளன.

அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதால் சரியான நேரத்தில் கொரோனா சிகிச்சையும் பெற முடியும். இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடிவதோடு, உயிரிழப்பையும் குறைக்க முடியும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News