செய்திகள்
கோப்புப்படம்

அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்

Published On 2021-04-14 23:45 GMT   |   Update On 2021-04-14 23:45 GMT
வதந்திகளை நம்பாமல் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறினார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய முகாமை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில் தடுப்பூசி திருவிழா மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தடுப்பூசி போடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இன்னும் குழுக்கள் அதிகப்படுத்தப்பட்டு தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல் முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 6 முதல் 8 வாரத்துக்கு பிறகு அடுத்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முககவசம் அணிவது, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News