செய்திகள்
மழை

திருச்சி-புதுக்கோட்டையில் இன்று திடீர் கோடை மழை

Published On 2021-04-12 14:20 GMT   |   Update On 2021-04-12 14:20 GMT
எதிர்பாராமல் மழை கொட்டியதால் அலுவலகம் செல்பவர்கள், தினக்கூலிகள் மழையில் நனைந்தபடி வேலைக்கு சென்றனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. தினமும் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் மாநகர வாசிகள் வெப்பம் தணிக்க குளிர்பான கடைகள், இளநீர், தர்பூசணி, பழக்கடைகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். முதியவர்கள் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். இரவில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் தூக்க மின்றி தவிர்க்கிறார்கள்.

இந்த கொளுத்தும் வெயிலால் பகல் நேரங்களில் சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக காலை 7 மணி அளவில் திருச்சி மத்திய பஸ் நிலையம், ஏர் போர்ட் பகுதி, கருமண்டபம், பொன்நகர், கண்டோன்மென்ட், மேலப் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடை மழை கொட்டியது. இந்த மழை சுமார் 45 நிமிடங்கள் பலத்த மழை நீடித்தது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மத்திய பஸ் நிலையத்தில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் பகலில் வெப்ப தாக்குதல் சற்று குறைவாக இருந்தது. இன்றைய திடீர் மழை மாநகரவாசிகளுக்கு ஆச்சர்யத்தை அளிப்பதாக இருந்தது. இதுபோன்று 2, 3 நாட்கள் மழை பெய்தால் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் என்றனர்.

எதிர்பாராமல் மழை கொட்டியதால் அலுவலகம் செல்பவர்கள், தினக்கூலிகள் மழையில் நனைந்தபடி வேலைக்கு சென்றனர். குறிப்பாக காலையிலேயே வீட்டில் இருந்து புறப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் குடையின்றி மழையில் நனைந்தவாறு பள்ளிகளுக்கு சென்றனர்.

கொரோனா கட்டுப்பாடுகளால் காந்தி மார்க்கெட்டில் சில்லறை காய்கறி விற்பனைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இன்று (திங்கட்க்கிழமை) முதல் சில்லறை விற்பனையை ஜி.கார்னர் திறந்த வெளிப்பகுதியில் வியாபாரிகள் தொடங்க திட்டமிட்டனர். இதற்கிடையே மொத்த வியாபாரிகளும் ஜி.கார்னருக்கே செல்வதாக தெரிவித்தனர். இரு தரப்பினரும் வியாபாரத்தை தொடங்கிய நிலையில் மழை கொட்டோ கொட்டென கொட்டி தீர்த்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் ஜி.கார்னர் மைதானத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்று மாலை காய்கறி சில்லறை விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி டவுன் மற்றும் ஏர்போர்ட் பகுதியில் இன்று காலை 8.5 மி.மீட்டர் மழை பதிவானது.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை பரவலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக அறந்தாங்கி, ஆலங்குடி, சேந்தன்குடி, கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, விராலிமலை உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை யால் தண்ணீர் குளம் போல் தேங்கியது. கொளுத்தும் வெயிலுக்கு இடையே பெய்த கோடை மழை மக்களை மகிழ்ச்சியடை செய்துள்ளது.

Tags:    

Similar News