செய்திகள்
அபராதம்

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 211 பேருக்கு அபராதம்

Published On 2021-04-12 12:47 GMT   |   Update On 2021-04-12 12:47 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 211 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனாவிற்கு 21 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெரம்பலூரில் கோர்ட்டு ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து சாவு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.

தற்போது கொரோனா மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவின் அச்சுறுத்தலை பொதுமக்கள் பொருட்படுத்தவில்லை.

முககவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் மீது போலீசார், சுகாதாரத்துறை, நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் அபராதம் விதித்தும் வருகின்றனர். இருப்பினும் பெரும்பாலானோர் தற்போதும் முககவசம் அணிவதில்லை. இருசக்கர வாகனத்தில் பலர் முககவசம் அணியாமல் குடும்பத்தினருடன் பயணிப்பதை காண முடிகிறது. மேலும் அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது இல்லை.

கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளையும் பொதுமக்கள் முறையாக பின்பற்றுவதில்லை. ஆட்டோக்களில் 2 பேருக்கு மேலும், காரில் 3 பேருக்கு மேலும் பயணிகளை டிரைவர்கள் ஏற்றிச் செல்கின்றனர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை, போலீசார் மற்றும் நகராட்சி மூலம் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து தலா ரூ.200 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டது. இதன்படி 166 பேரிடம் ரூ.33 ஆயிரத்து 200-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 8 பேரிடம் இருந்து தலா ரூ.500 வீதம் ரூ.4 ஆயிரமும் என மொத்தம் 174 பேரிடம் இருந்து ரூ.37 ஆயிரத்து 200 அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக நேற்று முககவசம் அணியாத 211 பேரிடம் ரூ.42 ஆயிரத்து 200-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 2 பேரிடம் இருந்து தலா ரூ.500 வீதம் ஆயிரம் ரூபாய் என மொத்தம் 213 பேரிடம் இருந்து ரூ.43 ஆயிரத்து 200 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல், நேற்று வரை பெரம்பலூர் மாவட்டத்தில் முககவசம், சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள், கூட்ட அரங்கில் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் ஆகியோரிடம் இருந்து மொத்தம் ரூ.5 லட்சத்து 49 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் அபராத தொகை ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 100 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News