செய்திகள்
மழை

தேனி, கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கன மழை

Published On 2021-04-12 10:21 GMT   |   Update On 2021-04-12 10:21 GMT
தேனி, கொடைக்கானலில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.

கொடைக்கானல்:

கோடைகாலம் தொடங்கியது முதல் தேனி மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவியது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள். பகல் பொழுதில் வெளியே வருவதை தவிர்த்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக வனப்பகுதியில் நிலவிய வறட்சியால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. மேலும் காட்டுத்தீ பற்றி அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.

இதேபோல் பெரியகுளம் சோத்துப்பாறை அணையை யொட்டியுள்ள வனப் பகுதியிலும் காட்டுத்தீயால் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று கொடைக்கானலில் மாலை மற்றும் இரவு நேரங்களில் சுமார் 2 மணி நேரம் கன மழை பெய்தது. விடுமுறை நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் கோக்கர்ஸ்வாக், மோயர்பாய்ண்ட், தூண்பாறை, பைன்பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

குளு குளு என இருந்த இதமான சூழ்நிலையை கண்டு ரசித்தவாறு, சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தனர்.

கோடை மழை தொடர வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர். கொடைக்கானலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் மழை பெய்ததால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் தேனி மாவட்டம் முழுவதும்பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.30 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 63.62 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிறது. 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.40 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 104.96 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 4.4, தேக்கடி 3.2, கூடலூர் 5.2, சண்முகாநதி அணை 2.3, உத்தமபாளையம் 2.2. மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 4, கொடைக்கானல் 9.6 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ பற்றி வந்தது. இதனை அணைக்க வனத்துறையினர் கடும் சவாலை சந்தித்தனர். இந்த நிலையில் தற்போது பெய்திருக்கும் மழை அவர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. 

Tags:    

Similar News