செய்திகள்
பலாப்பழங்கள்

பண்ருட்டி, கேரளாவில் இருந்து சேலத்திற்கு பலாப்பழம் வரத்து அதிகரிப்பு

Published On 2021-04-12 10:09 GMT   |   Update On 2021-04-12 10:09 GMT
இதேபோல் கேரளாவில் இருந்தும் டன் கணக்கில் லாரிகளில் பலாப்பழம் சேலத்திற்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது பலாப்பழம் சீசன் என்பதால் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

சேலம்:

பலாப்பழம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பண்ருட்டி. இந்த பலாவிற்கு என்று தனி சுவை உண்டு. தமிழகம் முழுவதும் பலாப் பழம் விளைந்தாலும், பண்ருட்டியில் பலாவிற்கு என்று மார்க்கெட்டில் தனி இடம் உண்டு. அதற்கு காரணம் அதன் அலாதியான சுவை. பண்ருட்டி பகுதியில் உள்ள மண்வளம், தட்ப வெப்ப நிலை ஆகியவை பலாப்பழம் வளமாகவும், சுவையாகவும் இருப்பதற்கு காரணம்.

செம்மண் பூமியான பண்ருட்டி, பணிக்கன் குப்பம், சாத்திப்பட்டு, மாளிகம்பட்டு, கீழக்குப்பம், நடுக்குப்பம், பிள்ளையார் குப்பம், கீழ்மாம்பட்டு, மேல் மாம்பட்டு, காடாம்டபுலியூர், மருங்கூர், காட்டுக்கூடலூர், சிறுதொண்டமாதேவி, தாழம்பட்டு, காளிக்குப்பம், நடுவீரப்பட்டு, புலியூர் காட்டுசாகை, அரசடிக் குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பில் பலா மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் தான் பலாப்பழ சீசன்களை கட்டும்.

இங்கு விளையும் பழங்கள் தமிழகத்தில் குறிப்பாக சேலம், சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களுக்கும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது.

இதேபோல் கேரளாவில் இருந்தும் டன் கணக்கில் லாரிகளில் பலாப்பழம் சேலத்திற்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது பலாப்பழம் சீசன் என்பதால் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினமும் 2 அல்லது 3 லாரிகளில் பலாப்பழம் சேலம் சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த பழம் சராசரியாக 5 கிலோ முதல் 17 கிலோ வரை எடை உள்ளது. கடந்த வருடம் கிலோ ரூ.20 ஆக இருந்த பலாப்பழம் தற்போது ரூ.30, ரூ.40 என விற்கப்படுகிறது. பெரிய பலாப்பழம் ரூ.150 முதல் ரூ.300 வரை விலை போகிறது. பொதுமக்கள் சத்திரம் மார்க்கெட்டிற்கு வந்து பலாப்பழங்களை வாங்கி செல்கின்றனர். இதேபோல் தள்ளுவண்டி கடைக்காரர்கள், பழக்கடைக்காரர்கள் ஒரே நேரத்தில் 5 முதல் 10 பழங்கள் வரை சில்லரை விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். இதனால் சேலத்தில் பலாப் பழம் விற்பனை சூடு பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் தேக்கம் அடைந்தது. அவை விற்பனையாகாமல் அழுகியது. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் நஷ்டம் அடைந்தனர்.

வழக்கமாக சத்திரம் மார்க்கெட்டில் 4 முதல் 5 லோடு வரை பலாப்பழங்கள் இறக்குமதி செய்யப்படும். தற்போது கொரோனா 2-ம் அலை வீசுவதால் 2 முதல் 3 லோடுகளே இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் ஏற்பட்ட நஷ்டத்தை போல் இந்த வருடம் நஷ்டத்தை சந்திக்காமல் இருக்க வேண்டி இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News