செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

தமிழகத்தில் ஒரே மாதத்தில் 75,832 பேர் கொரோனாவால் பாதிப்பு

Published On 2021-04-12 08:28 GMT   |   Update On 2021-04-12 08:28 GMT
சென்னையில் கடந்த 7 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது.

அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது.

தமிழக அரசு எடுத்த கடுமையான நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக செப்டம்பர் மாதத்துக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியது. அரசின் தொடர் நடவடிக்கைகளால் கொரோனா கட்டுக்குள் வந்தது.



கடந்த மார்ச் மாதம் முதல் வாரம் வரை தமிழகம் முழுவதும் தினமும் 400 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா கட்டுக்குள் வந்தால் பொதுமக்கள் பலர் முககவசம் அணிவதை கைவிட்டனர். சமூக இடைவெளியையும் மறந்தனர்.

மேலும் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்ததால் கட்சித்தலைவர்களின் பிரசாரங்களுக்கு கூட்டம் கூடத்தொடங்கியது. அரசியல் கூட்டங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியும் கேள்விக்குறியானது.

இதன்காரணமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகமாக பரவத் தொடங்கியது. அதன் விளைவாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்குள் தினசரி கொரோனா பாதிப்பு 400-ல் இருந்து 6618 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி புதிதாக 685 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அப்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,57,602 ஆக இருந்தது.

இந்தநிலையில் நேற்று வரை தமிழகத்தில் 9,33,434 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1 மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 75 ஆயிரத்து 832 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் கொரோனா 10 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த 7 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6,618 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி இதே அளவில் கொரோனா பாதிப்பு பதிவானது. 7 மாதங்களுக்கு பிறகு தற்போது ஒரு நாள் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னையில் 7 மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 631 பேரும், கோவையில் 617 பேரும் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் தற்போது 15,761 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 22 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12,909 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று பலியான 22 பேரில் 20 பேர் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். கொரோனா இறப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 57 ஆயிரத்து 638 பேர் இறந்துள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதித்தவர்கள் சதவீதம் அதிகரித்துள்ளது. பெருங்குடி மண்டலத்தில் கடந்த 7 நாட்களில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.3 சதவீதம் அதிகரித்துள்ளது. தண்டையார்பேட்டையில் 13.5 சதவீதமும், திருவொற்றியூரில் 12.2 சதவீதமும், ராயபுரத்தில் 7.8 சதவீதமும், தேனாம்பேட்டையில் 7.6 சதவீதமும், திரு.வி.க. நகரில் 6.3 சதவீதமும், ஆலந்தூரில் 6.1 சதவீதமும், மாதவரம், கோடம்பாக்கத்தில் தலா 6 சதவீதமும், மணலியில் 5.9 சதவீதமும், அடையாறில் 5.5 சதவீதமும், அண்ணாநகரில் 5 சதவீதமும், வளசரவாக்கத்தில் 2.9 சதவீதமும், அம்பத்தூரில் 1.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை கடந்த 7 நாட்களில் ஒட்டுமொத்தமாக 6.3 சதவீதம் பேருக்கு நோய் தொற்று அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 2,314 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை 8 லட்சத்து 78 ஆயிரத்து 571 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 41 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் இதுவரை 2 லட்சத்து 65 ஆயிரத்து 126 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 41 பேர் குணம் அடைந்துள்ளனர். 15 ஆயிரத்து 761 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4,324 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 26 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன. ஆனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41 ஆயிரத்து 955 ஆக உள்ளது. எனவே கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் போதிய படுக்கை வசதி இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறுகையில், ‘தமிழகத்தில் 60 ஆயிரம் படுக்கைகள் அமைக்க திட்டமிடப்பட்டு தற்போது 26 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருமே மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இணை நோய் உள்ளவர்களும், வயது முதிர்ந்தவர்களும், தீவிர பாதிப்பு உடையவர்களும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறலாம்.

மற்றவர்கள் கொரோனா கண்காணிப்பு மையங்களிலோ அல்லது வீடுகளிலோ தனிமைப்படுத்திக் கொண்டாலேயே போதுமானது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளன’ என்றார்.

Tags:    

Similar News