செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி போட்டதில் திருப்பூருக்கு 7-வது இடம்

Published On 2021-04-12 05:01 GMT   |   Update On 2021-04-12 12:16 GMT
கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வையும் பொதுமக்களிடம் அதிகமாக ஏற்படுத்தவும் சுகாதாரத்துறையினர் முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருப்பூர்:

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நாள் ஒன்றின் பாதுகாப்பு 3 ஆயிரம் என்ற அளவிற்கு இருந்து வந்தது. தற்போது 5 ஆயிரத்தையும் கடந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின்னர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதன் பின்னர் 45 வயது முதல் 60 வயது வரை இணை நோய் உள்ளவர்களுக்கு போடப்பட்டது. இதற்கிடையே பாதிப்பு அதிகமாக இருந்ததை தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 9 அரசு மருத்துவமனைகள், 13 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் என தடுப்பூசி பல்வேறு பகுதிகளில் போடப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். முதற்கட்ட தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 2-வது டோஸ் செலுத்தும் தேதியும் தெரிவித்து அனுப்பிவைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தியுள்ளது.

தமிழக அளவில் கொரோனா தடுப்பூசி கூடுதலாக செலுத்தும் மாவட்டங்களில் திருப்பூருக்கு 7-வது இடமும் கிடைத்துள்ளது. இதன் காரணமாக சுகாதாரத்துறையினர் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வையும் பொதுமக்களிடம் அதிகமாக ஏற்படுத்தவும் சுகாதாரத்துறையினர் முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News