செய்திகள்
தென்னக ரெயில்வே

கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு 500 ரெயில் பெட்டிகள் தயார்- தென்னக ரெயில்வே அறிவிப்பு

Published On 2021-04-12 04:31 GMT   |   Update On 2021-04-12 04:31 GMT
சென்னையில் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. மாநகராட்சி மருத்துவமனைகளில் 60 சதவீதம் இடங்கள் நிரம்பி விட்டன.
சென்னை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்தபோது மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதையடுத்து ரெயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை படுக்கை அறைகளாக மாற்றப்பட்டன. இந்திய ரெயில்வே சார்பில் நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய ரெயில் பெட்டிகள் படுக்கைகளாக மாற்றப்பட்டன.

அந்த வகையில் பல மாநிலங்களில் 45 ஆயிரம் படுக்கை வசதிகள் ரெயில் பெட்டிகள் மூலம் பெறப்பட்டன.

தெற்கு ரெயில்வேயில் சுமார் 500 ரெயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டன. அதில் சில பெட்டிகள் கடந்த ஆண்டு கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்டன.

கொரோனா தாக்கம் குறைந்த பிறகு அந்த ரெயில் பெட்டிகளில் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டன. என்றாலும் பெரும்பாலான ரெயில் பெட்டிகள் இன்னமும் வார்டுகள் போன்று பயன்படுத்தும் நிலையிலேயே இருக்கின்றன.



இதற்கிடையே சென்னையில் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. மாநகராட்சி மருத்துவமனைகளில் 60 சதவீதம் இடங்கள் நிரம்பி விட்டன.

தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முக்கிய மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத நிலை ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து ரெயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கி தர தயாராக இருப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுவற்காக எங்களிடம் 500 ரெயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டால் இந்த பெட்டிகளை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம். இந்த தகவலை தமிழக அரசுக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டோம்” என்றனர்.
Tags:    

Similar News