செய்திகள்
கோப்புபடம்

மெட்ரோ ரெயிலில் முககவசம் அணியாமல் பயணித்தவர்களிடம் ரூ.200 அபராதம் வசூல்

Published On 2021-04-12 03:17 GMT   |   Update On 2021-04-12 03:17 GMT
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 52 மெட்ரோ ரெயில்களில் முககவசம் இல்லாமல் பயணித்தவர்களை கண்டுபிடித்து 10 குழுக்கள் மூலம் ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஆன்லைன் மூலம் ‘கியூஆர்கோட்’ டிக்கெட் முறை மற்றும் பயண அட்டைகளை வழங்கி வருகிறது. அதேபோன்று ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு உடல்வெப்பநிலை கண்டறிவது, கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்குவது, நடைமேடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக நேற்று முதல் முககவசம் அணிய வேண்டும். தவறினால் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்து இருந்தது. அதன்படி மெட்ரோ ரெயில் நிலையங்களில் நேற்று 10 குழுக்கள் தீவிரமாக கண்காணித்து வந்தது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரெயிலில் பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனை தீவிரமாக அமல்படுத்துவதற்காக சென்னையில் நேற்று இயக்கப்பட்ட 52 ரெயில்களிலும் 10 குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் சோதனை நடத்தப்பட்டது. முககவசம் இல்லாமல் வந்த ஒரு சில பயணிகள் ரெயில் நிலையத்துக்கு உள்ளேயே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். பெரும்பாலான பயணிகள் நோயின் விரீயத்தை உணர்ந்து முககவசம் அணிந்து வந்தனர்.

அவர்களில் சிலர் ரெயில் பயணத்தின்போது ரெயிலில் உள்ள கேமராக்கள் மூலம் கண்காணித்ததில் முககவசத்தை கழற்றிவிட்டு பயணித்தனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் 50 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுவதால் கூட்டம் காணப்படும். ஆனால் நேற்று கொரோனா விதிகள் கடுமையாக்கப்பட்டதால் ரெயில்களில் கூட்டம் காணப்படவில்லை. ரெயில் நடைமேடைகளிலும் ஒலிபெருக்கிகள் மூலம் நோய் பரவல் தடுப்பதற்கான விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Tags:    

Similar News