செய்திகள்
சூரப்பா

துணைவேந்தர் சூரப்பாவின் மீதான விசாரணை தொடரும்- விசாரணை ஆணையம் தகவல்

Published On 2021-04-12 03:10 GMT   |   Update On 2021-04-12 03:10 GMT
சூரப்பாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவர் ஏற்கனவே கவர்னரிடம் துணைவேந்தர் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார்.
சென்னை:

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சூரப்பா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். இந்த துணைவேந்தர் பதவிக்கு அப்போது விண்ணப்பித்த 170 பேரில், சூரப்பாவை பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தேர்வு செய்திருந்தார்.

இதற்கு அப்போதே பல அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றினார். பல்கலைக்கழக ரீதியாக தொடர்ந்து பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன.



அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வி சிறப்பு நிறுவனம் என்ற சிறப்பு அந்தஸ்தை பெறுவதில், மாநில அரசுக்கும், இவருக்கும் இடையே பல்வேறு மோதல்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பை எதிர்த்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு கடிதம் எழுதியது என பல்வேறு விஷயங்களில் சூரப்பா பெரிதும் பேசப்பட்டார்.

அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார் என்ற நற்பெயரும் அவருக்கு இன்றளவும் இருக்கிறது. இதற்கிடையில் அவர் மீது ஊழல் புகார் எழுந்ததையடுத்து, அதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணை இன்னும் நிறைவு பெறவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் 3 ஆண்டு பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய பதவி காலம் முடிந்து இருந்தாலும், அவர் மீதான ஊழல் புகார் குறித்த விசாரணை தொடரும் என்று விசாரணையை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். இன்னும் 10 முதல் 15 நாட்களுக்குள் விசாரணையை முடித்து, அடுத்தகட்ட அறிக்கையை அரசுக்கும் அவர் சமர்ப்பிக்க இருக்கிறார்.

சூரப்பாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவர் ஏற்கனவே கவர்னரிடம் துணைவேந்தர் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அந்த கடிதத்துக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இது ஒரு புறம் இருக்க, புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் நியமித்தார். இந்த தேடுதல் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது. அதன்பின்னர், அந்த குழுவினர் புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான பணிகளை தொடங்க உள்ளனர். அதன்படி, இந்த குழு 3 பேரின் பெயரை கவர்னரிடம் பரிந்துரைக்க இருக்கிறது.
Tags:    

Similar News