செய்திகள்
விபத்தில் என்ஜினீயர் கார்த்திகேயன் வந்த கார் மீது லாரி மோதி நிற்பதை படத்தில் காணலாம். கார்த்திகேயன்

2 கார்கள் மீது லாரி பயங்கர மோதல் : மனைவி, மகளுடன் என்ஜினீயர் பலி

Published On 2021-04-11 20:22 GMT   |   Update On 2021-04-12 11:53 GMT
2 கார்கள் மீது லாரி மோதிய கோர விபத்தில் என்ஜினீயர் தனது மனைவி, மகளுடன் பலியானார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள வல்லக்குண்டாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 40). கணினி என்ஜினீயர். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சரண்யா (32). இவர்களது மகள் கனிகா (7). இவர்கள் வல்லக்குண்டாபுரத்தில் வசித்து வந்தனர். கனிகா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் கார்த்திகேயன் தனது மனைவி மற்றும் மகளை பெங்களூருவுக்கு அழைத்து செல்ல முடிவு செய்து வல்லக்குண்டாபுரம் வந்தார். பின்னர் ஒரு காரில் கார்த்திகேயன், மனைவி, மகளுடன் நேற்று காலை பெங்களூருவுக்கு புறப்பட்டார். காரை கார்த்திகேயன் ஓட்டிச்சென்றார்.

இவர்களுடைய கார் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே வந்த போது, இவர்களது காருக்கு முன்னால் மற்றொரு கார் சென்றது. அந்த காரில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பூவரசன் (25), அவருடைய தாயார் மாரியம்மாள் (50) ஆகியோர் இருந்தனர். இந்த காரை பூவரசன் ஓட்டி வந்துள்ளார்.

அப்போது எதிரே நாமக்கல்லில் இருந்து பொள்ளாச்சி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த கதிரவன் (30) என்பவர் ஓட்டி வந்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரி பூவரசன் ஓட்டி வந்த காரின் முன்பக்கத்தில் மோதி நிற்காமல், அதற்கு பின்னால் கார்த்திகேயன் ஓட்டி வந்த கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த வேகத்தில் கார்த்திகேயன் ஓட்டிவந்த கார் லாரியின் முன்பகுதிக்குள் புகுந்தது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கி உருக்குலைந்து சின்னாபின்னமானது. இதில் காரில் இருந்த கார்த்திகேயன், மனைவி சரண்யா, மகள் கனிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். பொள்ளாச்சியில் இருந்து வந்த காரை ஓட்டி வந்த பூவரசன் மற்றும் அவருடைய தாயாா் மாரியம்மாள் ஆகியோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து, விபத்தில் பலியானவர்களை மீட்க முயன்றனர். ஆனால் லாரியின் அடியில் கார் சிக்கிக்கொண்டதால், காருக்குள் இருந்த உடல்களை 2 மணி நேரம் போராடி பொக்லைன் எந்திரம் மூலமாக மீட்டனர்.

மேலும் காயம் அடைந்த பூவரசன் மற்றும் அவருடைய தாயார் மாரியம்மாள் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். குடிபோதையில் டிரைவர் லாரியை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News