செய்திகள்
கைது

கவுண்டம்பாளையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்- வாலிபர் கைது

Published On 2021-04-11 06:59 GMT   |   Update On 2021-04-11 06:59 GMT
கவுண்டம்பாளையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

கவுண்டம்பாளையம்:

கோவை இடிகரை அடுத்துள்ள மணியகாரம் பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகை யிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வ விநாயகம் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வீட்டின் முன்பு வேன் ஒன்று நின்றிருந்தது. அதன் பின்னால் ஒருவர் நின்று கொண்டு காரில் இருந்து ஏதோ பொருட்களை எடுத்து கொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விரைந்து வேனின் அருகில் சென்றனர்.

பின்னர் வேனில் ஏறி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் 18 பெட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து அங்கிருந்தவரிடம் விசாரித்த போது முறையாக பதில் அளிக்க வில்லை. இதையடுத்து போலீசார் பெட்டிகளை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தனர்.

அப்போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து பெட்டிகளையும் சேர்த்து 500 கிலோ இருப்பது தெரியவந்தது. இதனை அவர் வெளிபகுதிகளில் இருந்து வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்ற கங்காதரன்(40) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 500 கிலோ குட்கா மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் வேறு எங்காவது இதனை விற்பனைக்கு விட்டுள்ளாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News