செய்திகள்
மத்திய கூட்டுறவு வங்கியை பெண்கள் முற்றுகையிட்ட போது எடுத்த படம்.

களியக்காவிளையில் கூட்டுறவு வங்கியை பெண்கள் முற்றுகை

Published On 2021-04-10 17:10 GMT   |   Update On 2021-04-10 17:10 GMT
களியக்காவிளையில் அனுமதிக்கப்பட்ட விவசாய கடனை தர மறுத்ததாக கூட்டுறவு வங்கியை பெண்கள் முற்றுகையிட்டனர்.
களியக்காவிளை:

களியக்காவிளை அருகே மெதுகும்மல் கூட்டுறவு சங்கத்தின் கீழ் உள்ள மகளிர் மற்றும் விவசாய குழுக்களுக்கு விவசாய கடன் அனுமதிக்கப்பட்டது. இந்த தொகை கடந்த மாதம் 23-ந் தேதி அந்தந்த நபர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த பணத்தை களியக்காவிளை பி.பி.எம். சந்திப்பில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் பயனாளிகள் பணத்தை எடுக்க செல்லவில்லை. தேர்தல் முடிந்ததையடுத்து நேற்று முன்தினம் கூட்டுறவு வங்கிக்கு சென்று தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த வங்கி ஊழியர்கள் பணம் வரவில்லை என்று கூறி திருப்பி அனுப்பினர்.

தொடர்ந்து நேற்று காலை மீண்டும் பெண்கள் உள்பட ஏராளமானோர் பணம் எடுக்க சென்றனர். அப்போதும், ஊழியர்கள் பணம் வரவில்லை என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் வங்கியை முற்றுகையிட்டனர். அத்துடன் தங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்ட கடன் தொகையை தரவில்லை எனில் சாலை மறியல் செய்ய போவதாகவும் அறிவித்தனர்.

நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த வங்கி ஊழியர்கள் ஒரு நாளில் 15 பேருக்கு பணம் வழங்குவதாகவும், வரும் நாட்களில் மேலும் அதிகமான நபர்களுக்கு பணம் வழங்கப்படும் என கூறினர். இதையடுத்து வரும் நாட்களில் அனைவருக்கும் பணம் தரவில்லை எனில் போராட்டம் நடத்த போவதாக கூறிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News