செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்தபடம்.

உப்பிலியபுரம் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

Published On 2021-04-10 15:02 GMT   |   Update On 2021-04-10 15:02 GMT
உப்பிலியபுரம் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிதள பொறுப்பாளரை மாற்றக்கோரி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிதள பொறுப்பாளராக கவிதா (வயது 35) உள்ளார். இந்தநிலையில் அவருடைய நடவடிக்கைகளை கண்டித்தும், அவரை மாற்றக்கோரியும் ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் நேற்று மதியம் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா, வட்டார கிராம வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளர்கள் கூறியதாவது:-

நேற்று முன்தினம் ஆலத்துடையான்பட்டியிலிருந்து 120 தொழிலாளர்கள் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருப்பம்பட்டி அருகில் வேலை செய்ய அனுப்பினார்கள். நாங்கள் ஆட்டோ மூலம் அங்கு சென்று காத்திருந்தபோது, அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு மாற்று வேலைக்கு அனுப்பினார்கள். அங்கிருந்து வெயிலில் நடந்து செல்லும் போது, செல்லம்மாள் (62), லட்சுமி (43) ஆகிய 2 பெண்கள் சாலையிலேயே மயங்கி விழுந்தனர். தொழிலாளர்களைப் பற்றி அக்கரையின்றி பணிதள பொறுப்பாளர் செயல்படுகிறார். எனவே அவரை மாற்றவேண்டும். மேலும் சரியான முறையில் கூலி கொடுக்கவில்லை என்று தொழிலாளர்கள் கூறினார்கள்.

அதற்கு, இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News