செய்திகள்
வங்கி ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

மேலாளருக்கு கொரோனா தொற்று - உடன்குடியில் வங்கிக்கு விடுமுறை

Published On 2021-04-10 14:44 GMT   |   Update On 2021-04-10 14:44 GMT
உடன்குடியில் மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வங்கிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. அந்த வங்கி ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
உடன்குடி:

உடன்குடி சத்தியமூர்த்தி பஜாரில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது.

இந்த வங்கியில் நெல்லையைச் சேர்ந்தவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் தினமும் நெல்லையிலிருந்து வங்கி வேலைக்கு வந்து செல்வது வழக்கம். அவருக்கு, கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் மாலையில் காய்ச்சல் குறையாததால் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

இதை தொடர்ந்து அவர் அந்த ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து நேற்று உடன்குடி வட்டார சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று வங்கிக்கு சென்று ஊழியர்கள் அனைவரையும் வெளியேற்றினர். உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஏற்பாட்டில் வங்கியின் உள்புறம், மற்றும் சுற்றுப்புறங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

சுகாதார மேற்பார்வையாளர் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளர்கள் சேதுபதி, ரமேஷ் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். வங்கி ஊழியர்கள் 6 பேருக்கும் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

பின்னர் வங்கிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு, வங்கி மூடப்பட்டது. பணிக்கு வந்த ஊழியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். நாளையும், மறுநாளும் விடுமுறை தினமாகும். திங்கட்கிழமை முதல் வங்கி வழக்கம் போல் செயல்படும் என வங்கி வட்டாரத்தில் ெதரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வட்டார மருத்துவ அதிகாரி கூறுகையில்,‘10-ந் தேதி(சனிக்கிழமை) முதல் முகக்கவசம் அணியாமல் யார் வந்தாலும் உடனடியாக ரூ.200 அபராதம் விதிக்கப்படும். வீட்டில் இருந்து வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அவசர தேவைக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது’ என்றார்.

Tags:    

Similar News