செய்திகள்
கொரோனா வைரஸ்

கோவை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த காய்ச்சல் பரிசோதனைகள் அதிகரிப்பு

Published On 2021-04-10 10:35 GMT   |   Update On 2021-04-10 10:35 GMT
மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புறநகர் மாவட்ட பகுதிகளில் முக்கிய இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை:

தமிழகத்தில் இரண்டாவது அலையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கோவையில் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்றும், இதில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பாதிக்கப்பட்ட வீடுகள் அல்லது 3 நபர்களுக்கு மேல் தெருக்கள் என வசதிகளுக்கு உட்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அமைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தீவிரமடைந்த போது 100 வார்டுகளில் 70 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் வரை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது 30 முதல் 35 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புறநகர் மாவட்ட பகுதிகளில் முக்கிய இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் தனித் தனியாக திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. மண்டலம் ஒவ்வொன்றிலும் தினசரி 500 முதல் 550 பேர் வரை சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற் கொள்ளப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் இருந்தால் அவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் 5 பேரை கணக்கிட்டும், அவர்களுக்கு அடுத்தகட்ட தொடர்பில் இருந்தவர்கள் என 15 பேரை கணக்கிட்டு மொத்தமாக 20 பேர் வரை சளி மாதிகரிகள் விரைவாக சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரவுதல் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு பரவுதல் என்பதை தடுக்க முடியும்.

சாதாரண கடைக்கோ, டீ குடிக்கவோ செல்வோருக்கு கூட கொரோனா தொற்று ஏற்பட்டு விடுகிறது. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். முககவசம் அணியாதவர்களுக்கு ரூ. 100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விதிகளை மீறும் தனி நபர், குடும்பத்தினருக்கும் அபராதம் விதிக்க திட்டமிட்டு உள்ளோம். சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்களுக்கு ஆய்வு சென்று அபராதம் விதித்து வருகிறோம். நேற்று ஒரே நாளில் மாநகரில் முககவசம் அணியாத 102 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகள் 25 என மொத்தம் ரூ. 22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து மக்களிடம் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். எனவே பொதுமக்கள் அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டு கொள்வோர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தெருக்களுக்கே சென்று தடுப்பூசிகளை செலுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

Similar News