செய்திகள்
தாறுமாறாக ஓடிய கார்

திருப்பூரில் தாறுமாறாக ஓடிய கார் மோதி பனியன் நிறுவன தொழிலாளி மரணம்

Published On 2021-04-10 08:44 GMT   |   Update On 2021-04-10 08:44 GMT
திருப்பூரில் தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் பனியன் நிறுவன தொழிலாளி உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் அடுத்த திருமுருகன் பூண்டியில் நேற்று இரவு அவிநாசியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் இடது புறத்தில் தாறுமாறாக சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மற்றும் ரோட்டின் இடது புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி அருகில் இருந்த செல்போன் கடையின் முன்பு மோதி நின்றது.

இந்த விபத்தில் செல்போன் கடையில் நின்று கொண்டிருந்த ராக்கியாபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (37) என்பவர் படுகாயம் அடைந்தார். மேலும் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்களும் சேதமானது. இந்த நிலையில் காயமடைந்த ஈஸ்வரமூர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் காரை ஓட்டி வந்த நபரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து திருமுருகன்பூண்டி போலீசில் ஒப்படைத்தனர். திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த காரை ஓட்டி வந்தவர் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த கிஷோர் சந்தர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்ததும் அதனால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இதற்கிடையே விபத்தில் காயம் அடைந்த ஈஸ்வரமூர்த்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து குடிபோதையில் கார் ஓட்டி வந்த கிஷோர் சந்தரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News