செய்திகள்
திருமாவளவன்

அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று ஆர்ப்பாட்டம்

Published On 2021-04-09 19:10 GMT   |   Update On 2021-04-09 19:10 GMT
அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோகனூரில் சாதி வெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் அர்ஜூனன், சூரியா ஆகிய 2 தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த படுகொலைகளை செய்த சாதி வெறியர்கள் மற்றும் மணல் திருடர்களை உடனடியாக கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தவேண்டும். இந்த படுகொலைகளை கண்டித்து ஏப்ரல்10-ந்தேதி (இன்று) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அ.தி.மு.க.வின் காவேரிப்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். திருட்டு மணல் ஏற்றிய வாகனங்கள் தலித் குடியிருப்பின் வழியாக வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது நடைபெற்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கவுதமசன்னாவுக்கு ஆதரவாக பானை சின்னத்துக்கு அந்த கிராம இளைஞர்கள் வாக்குகள் சேகரித்துள்ளனர். அதோடு பா.ம.க. ஆதரிக்கும் அ.தி.மு.க. வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் சூழலைப் பயன்படுத்தி, பழனியின் மகன்களும் அ.தி.மு.க., பா.ம.க. சாதிவெறியர்களும் கூட்டுசேர்ந்து இந்த படுகொலையை நடத்தியுள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்ததற்கு பிறகு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். தோல்வி பயத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க.-பா.ம.க. கட்சிகளை சேர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். காட்டுமன்னார்கோவில், வானூர், திருப்போரூர், கிருஷ்ணகிரி, அரியலூர் தொகுதிகளிலும் கூட தலித்துகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்துள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ள தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போவதைத் தாங்க முடியாத மதவெறியர்களும் சாதிவெறியர்களும் தமிழ்நாட்டை சீர்குலைக்க மிகப்பெரிய சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளனர் என்பதன் அடையாளமே இந்தப் படுகொலை. இத்தகைய சூழலில் இதனை வன்மையாக கண்டித்து குரல் எழுப்பவேண்டும் என அனைத்து ஜனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News