செய்திகள்
வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை தேர்தல் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி ‘சீல்' வைப்பு

Published On 2021-04-08 17:49 GMT   |   Update On 2021-04-08 17:49 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இந்த அறைகளை சுற்றிலும் 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழுப்புரம்:


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது. இந்த தேர்தலில் செஞ்சி சட்டமன்ற தொகுதியில் 78.41 சதவீத வாக்குகளும், மயிலம் தொகுதியில் 79.54 சதவீத வாக்குகளும், திண்டிவனம் தொகுதியில் 78.43 சதவீத வாக்குகளும், வானூர் தொகுதியில் 79.79சதவீத வாக்குகளும், விழுப்புரம் தொகுதியில் 76.97 சதவீத வாக்குகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 81.39 சதவீத வாக்குகளும், திருக்கோவிலூர் தொகுதியில் 76.27 சதவீத வாக்குகளும் பதிவானது. இதன் மொத்த வாக்குப்பதிவு 78.62 சதவீதமாகும்.

மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகளை தேர்தல் முடிந்ததும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டு அவை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டது.



அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் நள்ளிரவு வரை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு வாக்குச்சாவடிகள் வாரியாக தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அண்ணாதுரை, விழுப்புரம் தொகுதி வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு சென்று வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? என பார்வையிட்டார். அதன் பிறகு வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் முன்னிலையில் அந்த அறையை தேர்தல் பொது பார்வையாளர் ரஞ்சிதா, பூட்டி சீல் வைத்தார். அப்போது தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிதாஸ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெங்கடசுப்பிரமணியன், கோவர்த்தனன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல் விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகளை தேர்தல் முடிந்ததும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டு அவை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அந்த அறை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

செஞ்சி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான செஞ்சி மேல்களவாயில் உள்ள டேனி கல்வியியல் கல்லூரியிலும், மயிலம், திண்டிவனம் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள் அதன் வாக்கு எண்ணும் மையமான திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியிலும், வானூர் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள் அதன் வாக்கு எண்ணும் மையமான வானூர் ஆகாசம்பட்டு ஸ்ரீஅரவிந்தர் கலை அறிவியல் கல்லூரியிலும், விக்கிரவாண்டி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அதன் வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருக்கோவிலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அதன் வாக்கு எண்ணும் மையமான கண்டாச்சிபுரம் எஸ்.கொல்லூரில் உள்ள வள்ளியம்மை மகளிர் கலை அறிவியல் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும் துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், உள்ளூர் போலீசார் அடங்கிய 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News