செய்திகள்
திருமணம்

ஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்

Published On 2021-04-08 09:06 GMT   |   Update On 2021-04-08 09:11 GMT
கொரோனா பரவலை அடுத்து தமிழகத்தில் ஏப்.10-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளி மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரசை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடனும், 30.04.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே மறு உத்தரவு வரும்வரை கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

* சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடரும்.

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக கடை பிடிக்கப்படும்.

* கோவில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடை விதிக்கப்படுகிறது.

* கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை கடைகள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

* அதேபோன்ற மாவட்டங்களில் உள்ள மொத்த காய்கறி வளாகத்தில் உள்ள சில்லறை கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

* தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலங்களில் பணிபுரிபவர்கள் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.


* மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பஸ்கள், சென்னையில் இயக்கப்படும் மாநகர பஸ்களில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

* புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் பஸ்களிலும் அமர்ந்து பயணம் செய்யவே அனுமதிக்கப்படும்.

* காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ஆகியவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* உணவகங்கள், தேனீர் கடைகள் 50 சதவீத இருக்கைகளுடன் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

* மேலும் உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்படுகிறது.

* கேளிக்கை விடுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* பொழுது போக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்றவற்றில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

* அனைத்து திரையரங்குகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்.

* உள் அரங்குகளில் மட்டும் அதிகபட்சமாக 200 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள் மற்றும் விழாக்களுக்கு அனுமதிக்கப்படும்.

* திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.

* விளையாட்டு அரங்கங்கள் மற்றும் மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

* நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் செயல்பட அனுமதி.

* பொருட்காட்சி அரங்கங்கள், வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொது மக்கள் வழிபட இரவு 8 மணிவரை அனுமதிக்கப்படும்.

* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதசார்பு கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

* சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இருப்பினும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

* வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் டிரைவர் தவிர்த்து 3 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி.

* ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பேர் மட்டுமே செல்லலாம்.

* வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களை கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படும்.

* சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு மண்டலத்திலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்.

நோய் கட்டுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த பகுதியில் இருந்து வெளியில் வராத வகையில் காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை கொண்டு தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

இந்த பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார்வலர்களும் நியமிக்கப்படுவர்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பாடுபட வேண்டும்.

பொதுமக்கள் வெளியே செல்லும் போது பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தலும் வேண்டும்.



காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்திடவும், வீட்டிற்கு வீடு சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை தினந்தோறும் கண்காணிக்கவும், நோய் தொற்று ஏற்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இதனை தீவிரமாக கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

நோய் தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி அருகே உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும். நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News