செய்திகள்
கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட மாடுவிழுந்தான்பாறையில் முதியவர், மூதாட்டி வாக்களிக்க வந்த போது எடுத்த படம்.

வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்போட முதியவர்கள்- மாற்றுத் திறனாளிகள் ஆர்வம்

Published On 2021-04-07 03:22 GMT   |   Update On 2021-04-07 03:22 GMT
குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 312 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்கு சாவடிகள் சிலவற்றில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட கருவிகள் பொருத்துவதற்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டதால் குறித்த நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை
குளித்தலை:

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 312 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்கு சாவடிகள் சிலவற்றில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட கருவிகள் பொருத்துவதற்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டதால் குறித்த நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை. இந்த தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்து மதியம் ஒரு மணி நிலவரப்படி 38.14 சதவிகிதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்தது.

பள்ளி வாக்குச்சாவடியில் முஸ்லிம் பெண்கள் அதிக ஆர்வமுடன் வந்து வாக்கு அளித்தனர். அப்போது அவர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வாக்களித்தனர்.

நச்சலூர் பகுதிகளில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

கடவூர் ஒன்றியத்தில் கடவூர், இடையபட்டி, பாலவிடுதி, தரகம்பட்டி, மைலம்பட்டி, காணியாளம்பட்டி உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். குறிப்பாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்போதுவதில் அதிக ஆர்வம் காட்டினர்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நொய்யல், புன்னம்சத்திரம், குளத்துப்பாளையம், சேமங்கி, நடையனூர், கரைப்பாளையம், தவிட்டுபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 100 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டி ஒருவரை புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளி வாக்குச்சாவடிக்கு ஒருவர் கையைப் பிடித்து அழைத்து வந்தார். நடக்க முடியாதவர்களை வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள தள்ளுவண்டியில் அமர வைத்து வாக்குச் சாவடிக்குள் கொண்டு சென்று அவர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நஞ்சை புகளூர் ஊராட்சி தவுட்டுபாளையத்தில் இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையொட்டி அங்கிருந்த அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரத்திற்கு சீல் வைத்தனர். தோகைமலையிலும் காலை முதல் இரவு 7 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

அரவக்குறிச்சி அருகே கணக்குப்பிள்ளைபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று மதியம் சுமார் 4.30 மணிக்கு வாக்காளர்கள் யாருக்கு வாக்கு பதிவு செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் விவிபேட் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலின்பேரில், சம்பந்தபட்ட வாக்குச்சாவடிக்கு தேர்தல் அலுவலர்கள் விரைந்து வந்து வேறு ஒரு எந்திரம் பொருத்தினர். பின்னர் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. இதனால், அந்த வாக்குச்சாவடியில் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

புகளூர்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாலை 6 மணிக்கு மேல் காரில் வந்த இரு கொரோனா நோயாளிகள் வாக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் வந்த காரில் புறப்பட்டு சென்றனர்.
Tags:    

Similar News