செய்திகள்
காங்கிரஸ்

பா.ஜ.கவினர் டோக்கன் வினியோகிப்பதாக புகார்- காங்கிரசார் திடீர் சாலை மறியல்

Published On 2021-04-06 11:29 GMT   |   Update On 2021-04-06 11:29 GMT
கோவை வைசியாள் வீதியில் உள்ள மக்களுக்கு பா.ஜனதாவினர் வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்வதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் காங்கிரசார் புகார் கொடுத்தனர்.

கோவை:

கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதாவை சேர்ந்த தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசனும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரசை சேர்ந்த மயூரா ஜெயக்குமாரும், போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை கோவை வைசியாள் வீதியில் உள்ள மக்களுக்கு பா.ஜனதாவினர் வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்வதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் காங்கிரசார் புகார் கொடுத்தனர்.


ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலையும் வைசியாள் வீதி பகுதியில் சிலர் டோக்கன் வினியோகம் செய்வதாக காங்கிரசாருக்கு தகவல் கிடைத்தது. காங்கிரஸ் கட்சியினர் விரைந்து சென்று அவர்களை கையும், களவுமாக பிடித்தனர்.

ஓட்டுக்கு டோக்கன் வினியோகித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் வைசியாள் வீதியில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக நாம்தமிழர் கட்சி வேட்பாளரான அப்துல் வகாப்பும் போராட்டதில் கலந்து கொண்டார். தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. இதேபோல் செல்வபுரம் பகுதியில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News