செய்திகள்
கோப்புப் படம்

11 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் 5 டிகிரி வரை உயரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2021-04-05 22:32 GMT   |   Update On 2021-04-05 22:32 GMT
திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை:

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. வெளியில் செல்லக்கூட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. அதிலும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கடும் உக்கிரத்துடன் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருவதை பார்க்க முடிகிறது. ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழை பெய்தாலும், பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.

சாதாரண நாட்களில் இருக்கும் வெப்பத்தின் அளவை விட கூடுதலாக வெயிலின் தாக்கம், பல இடங்களில் பதிவாகி வருகிறது. வெப்பத்தினால் உடலில் வியர்வை வெளியேறி, உடல் சோர்வு உள்பட பல்வேறு விதமான பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். 
இந்நிலையில், இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் 60 முதல் 80 சதவீதம் வரை இருப்பதால் கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய 11 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது இயல்பை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை அதிகரித்து காணப்படும். அதிலும் திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். இதனால் இந்த மாவட்டங்களில் இருப்பவர்கள் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Tags:    

Similar News