செய்திகள்
ஜேபி நட்டா

தமிழகத்தில் நடக்கும் வருமானவரி சோதனைக்கும் பா.ஜ.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - ஜே.பி.நட்டா தகவல்

Published On 2021-04-05 02:58 GMT   |   Update On 2021-04-05 02:58 GMT
தமிழகத்தில் நடக்கும் வருமான வரி சோதனைக்கும், பா.ஜ.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
சென்னை:

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வந்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் 5 மாநில தேர்தல் நிலவரம் குறித்து பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சத்தீஷ்கார் மாநிலத்தில் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிக வலிமையாக இருப்பதால் இந்த தேர்தலில் வென்று அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க. அரசு, மத்திய அரசின் பல்வேறு மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதால் மக்கள் அதன் மூலம் நல்ல பலன் பெற்றுள்ளனர். இதனால் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்பதே தமிழக மக்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி நல்ல முறையில் சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது.

மேற்கு வங்காளத்தில் இதுவரை நடந்துள்ள 2 கட்ட வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மையான வெற்றி கிடைக்கும். அதேபோல் அசாம் மாநிலத்திலும் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்து கொள்ளும். கேரள மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக பா.ஜ.க. உருவெடுத்து வருகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஜே.பி.நட்டாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் நடக்கும் வருமான வரி சோதனை உள்நோக்கம் கொண்டதாக அரசியல் கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனரே?

பதில்:- தமிழகத்தில் நடக்கும் வருமான வரி சோதனைக்கும், பா.ஜ.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பெறப்படும் புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் பணிகளின் அடிப்படையில் தன்னிச்சையாக சோதனை நடத்தி வருகின்றனர். இதனை தி.மு.க. அரசியல் ஆக்குகிறது.


கேள்வி:- பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளதே?

பதில்:- குடியுரிமை சட்டம் தொடர்பாக எங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறோம். இதுதொடர்பாக அ.தி.மு.க.விடம் பேசுவோம்.

கேள்வி:- கருத்து கணிப்புகள் எதிர்கட்சிக்கு சாதகமாகவே இருக்கிறதே?

பதில்:- கருத்து கணிப்புகள் குறித்து நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றி உறுதியாகி உள்ளது.

கேள்வி:- மாநில பிரச்சினைகளில் பா.ஜ.க. அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்ற புகார் உள்ளதே?

பதில்:- தமிழகம் மட்டுமில்லாமல் அனைத்து மாநில மக்களின் எண்ணங்கள் சார்ந்த விஷயங்களுக்கும் மதிப்பளிக்கும் கட்சி பா.ஜ.க.தான். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்ததற்கான முழுக்காரணமும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான். அந்த தடையை நீக்க அவசர சட்டம் கொண்டு வந்தவர் பிரதமர் நரேந்திரமோடி. தமிழக மக்களின் நலனில் அக்கறை உள்ள நபராக இருந்தால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏன் கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

கேள்வி:- பெட்ரோல், டீசல் விலை உயர்வு இந்த தேர்தலில் எதிரொலிக்குமா?

பதில்:- பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு முழுமையாக கவனித்து வருகிறது. அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கேள்வி:- மதுரையில் ஏய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பாகவே நிற்கிறதே?

பதில்:- மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. பெரிய திட்டம் என்பதால் நிலம் கையகப்படுத்துவது, கட்டிட வடிவமைப்பு, அனுமதி பெறுவது போன்றவற்றால் காலதாமதம் ஆகி உள்ளது. விரைவில் மதுரை ஏய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மத்திய மந்திரி கிஷன்ரெட்டி, தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, சையத் ஜபார் இஸ்லாம் எம்.பி., மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News