செய்திகள்
மு.க.ஸ்டாலின்

இந்து சமய ஆன்றோர், சான்றோர்களிடம் கோவில்கள் ஒப்படைக்கப்படுமா?-‘தினத்தந்தி’க்கு மு.க.ஸ்டாலின் பேட்டி

Published On 2021-04-04 02:37 GMT   |   Update On 2021-04-04 02:37 GMT
தமிழக கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ஜக்கி வாசுதேவ் கடிதம் எழுதியிருந்தார்.

இதுகுறித்து, கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘தி.மு.க. அரசு 1989-ல் குன்றக்குடி அடிகளார் தலைமையில் அமைத்திருந்த இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக்குழுவின் பரிந்துரையின்படி கோவில்களின் நிர்வாகம் மேலும் சிறப்புடன் நடைபெறுவதற்குத் தகுந்த அதிகாரங்களுடன் கூடிய சட்டரீதியான உயர்நிலை ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் இருக்கிறது. தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வரவேற்கும் திறந்த மனம் கொண்டது’’ என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- உங்கள் தேர்தல் அறிக்கையையும், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் எப்படி ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்?.

பதில்:- தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களின் விருப்பங்கள், தேவைகள், மாநிலத்தின் வளர்ச்சி - முன்னேற்றத்திற்கான கூறுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏழை - எளிய, நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்வுக்கும் - மேம்பாட்டிற்கும், குறிப்பாக மதம், சாதி, நம்பிக்கை என்ற அடிப்படையில் வேற்றுமை காணாமல் அனைவருக்குமான - எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான அறிக்கை. 10 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, நிதி நிலைமை, வேலைவாய்ப்பு, தனி நபர் வருமானம் ஆகிய அனைத்தையும் 50 ஆண்டுகாலம் பின்னுக்கு இழுத்துச் சென்ற இருளடைந்த அ.தி.மு.க. அரசிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்டு முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான அறிக்கை.

தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை சீரழிக்கும் தீய நோக்கத்துடன் பலவீனமான, பதருக்கு ஒப்பான அ.தி.மு.க. அரசைப் பயன்படுத்திக்கொண்டு - தமிழ்நாட்டின் சமூக - மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கத் துடிக்கும் பா.ஜ.க.விடம் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள அறிக்கை. வெளிப்படையான - ஊழலற்ற - நேர்மையான - மக்கள் அரசை அமைக்க தி.மு.க., தேர்தல் அறிக்கை கொடுத்திருக்கிறது. குடும்பத் தலைவியருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை, கொரோனா கொடுமையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரூ.4 ஆயிரம், பால் விலை ரூ.3 குறைப்பு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு, டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைப்பு, தாய்மார்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.100 மானியம் ஆகிய மத்திய - மாநில அரசுகளின் விலை ஏற்றத்தை சமாளிக்க அளித்துள்ள வாக்குறுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்திருக்கிறோம். தமிழ்நாட்டின் விடியலுக்கான தேர்தல் அறிக்கை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை.


கேள்வி:- நீங்கள் ஒவ்வொரு அறிவிப்பும் வெளியிடும்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் அறிவிக்க இருந்த இந்த அறிவிப்பை மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே தெரிந்துகொண்டு அறிவித்து விடுகிறார் என்று கூறுகிறாரே?

பதில்:- ஊழல், ஊழல் என்ற ஒற்றை நோக்கத்தைச் சுற்றியே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் இந்த 4 ஆண்டுகால செயல்பாடுகள் இருந்தன. தனது சம்பந்திக்கும், சம்பந்தியின் உறவினர்களுக்கும் டெண்டர் வழங்கி சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டே உத்தரவிட்ட ஒரு முதல்-அமைச்சரை இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகவே, அவர்களுக்கு மக்களைப் பற்றி சிந்திக்க நேரமில்லை, நினைப்புமில்லை. மக்களுக்கு என்னென்ன தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற மார்க்கமும் தெரியவில்லை. அவருக்கு கைவந்த கலை ‘‘காப்பி’’ அடிப்பது மட்டுமே. தி.மு.க.வை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தாலும், எப்போதும் மக்களுடன் இருக்கிறது.

மக்களின் குறைகளை அறிந்துள்ளது. அதனால் தான் தி.மு.க.வின் அறிவிப்புகளை மட்டுமல்ல - தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையே காப்பியடித்திருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஒரு தேர்தல் அறிக்கையைக் கூட சொந்தமாகத் தயாரிக்க முடியாத ஒரு முதல்-அமைச்சர் கையில் சிக்கி இந்த நான்காண்டுகள் தமிழ்நாடும் - அ.தி.மு.க.வும் நலிவடைந்துவிட்டது. அதனால் தமிழகப் பொதுமக்கள் மட்டுமல்ல, அ.தி.மு.க. தொண்டர்களே எடப்பாடி பழனிசாமியை நிராகரித்துத் துரத்துவார்கள்.

கேள்வி:- வருவாய்ப் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் மிக அதிகமாக இருக்கிறது. கடனும் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் போய்விட்டது. இந்த சூழ்நிலையில், தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அறிவிப்புகளை நிறைவேற்ற எப்படி நிதி திரட்டுவீர்கள், புதிய வரி போடப்போகிறீர்களா?

பதில்:- அ.தி.மு.க. ஆட்சியில் பால் விலை, பஸ் கட்டணம், மின்கட்டணம் அனைத்தையும் கண்மூடித்தனமாக உயர்த்தினார்கள். கமிஷன் அடிப்பதற்காக பெருமளவு கடன் வாங்கினார்கள். வாங்கிய கடனிலும், வந்த வருவாயிலும், ஊழல் செய்தார்கள். அதனால்தான் அமைச்சர்கள் அனைவரின் சொத்துக்களும் வரலாறு காணாத சதவீதத்தில் உயர்ந்து நிற்கிறது. ஆனால் 10 ஆண்டுகளில் மட்டுமல்ல, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகளில் ஒரு உருப்படியான திட்டத்தைக் கூட நிறைவேற்றத் திறனில்லை. ஆகவே அப்படி புதிய வரி போட்டு மக்களை இன்னலுக்கு உள்ளாக்கும் அரசாக தி.மு.க. அரசு இருக்காது. என்னைப் பொறுத்தமட்டில், அ.தி.மு.க. அரசில் தலைவிரித்தாடும் ஊழலை ஒழித்தாலே மாநில அரசின் நிதி நிலைமையை சரி செய்திட முடியும் என நம்புகிறேன். அதையும் தாண்டி - மாநில நிதி நிலைமையை சீரமைக்க - நிதி மற்றும் பொருளாதார வல்லுனர்களிடம் கலந்து பேசியிருக்கிறேன். மக்கள் மீது சுமை ஏற்றாமல் - மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்குவது குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறேன். அந்த அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகள் அளித்திருக்கிறேன். ஆகவே தமிழக மக்களுக்கு - தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். கருணாநிதியைப் போலவே இந்த ஸ்டாலின். செய்வதை மட்டுமே சொல்வேன்; சொன்னதை நிச்சயம் செய்வேன்.

கேள்வி:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்கிறார். நீங்கள் அவரை விவசாயி வேடம் போடுவதாக சொல்கிறீர்கள். ஏன்?

பதில்:- ‘‘விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று ஐகோர்ட்டே தீர்ப்பளித்தும் சுப்ரீம் கோர்ட்டில் தடை பெற்றார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சேலம் எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்த்த விவசாயிகள் மீது தடியடி நடத்தி வதைத்தார். விவசாயிகளுக்கும், வேளாண்மைக்கும் ஆபத்தான மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்து, வாக்களித்துவிட்டு இப்போது ஒவ்வொரு ஊராகச் சென்று மத்திய பா.ஜ.க. அரசின் இந்தச் சட்டங்களை ஆதரித்து பிரசாரமும் செய்து வருகிறார். 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பல லட்சக்கணக்கில் உண்மையான விவசாயிகள் 4 மாதங்களுக்கு மேல் போராடி கொண்டிருக்கிறார்கள். அவர்களை அலட்சியப்படுத்திவிட்டு, இவர் ஆதரித்துக் கொண்டிருக்கிறார். விவசாயப் பெருமக்களின் நாடி தெரியாத இவர் எப்படி விவசாயி ஆக இருக்க முடியும்?

மாநில உரிமைகளை காப்பாற்றத் தவறியது. தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை தாரை வார்த்து தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கூட வட இந்திய இளைஞர்களுக்கு வேலை கொடுத்தது. குட்கா ஊழல், நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஊழல், காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்குவதில் ஊழல், பருப்பு - முட்டை வாங்குவதில் ஊழல், ஆவின் ஊழல், துடைப்பம் முதல் எல்.இ.டி பல்பு வரை வாங்குவதில் ஊழல், காக்னிசன்ட் கம்பெனிக்கு கட்டிட அனுமதி வழங்குவதில் அமெரிக்க டாலரில் ஊழல், கொரோனா பரிசோதனை கருவிகள் வாங்குவதிலும் ஊழல் என 10 ஆண்டுகளில் “ஊழல், ஊழல்” ‘‘லஞ்சம் கமிஷன்’’ என்பதைத் தவிர வேறு எதையும் அ.தி.மு.க. அரசும் செய்யவில்லை; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செய்யவில்லை.

கேள்வி:- இந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டு துறையின் கீழ் இருக்கும் இந்து கோவில்களை எல்லாம் மற்ற வழிபாட்டு தலங்களை போல, இந்து மத ஆன்றோர்கள், சான்றோர்கள் நிர்வாகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற பரவலான கோரிக்கையை உங்கள் அரசு ஏற்குமா?

பதில்:- ரூ.523 கோடியில் 4724 திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள் நடத்திய அரசுதான் தி.மு.க. அரசு - இப்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆலயங்கள் குடமுழுக்கிற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு, இந்து சமய மக்களின் வழிபாட்டு உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்கும் வகையில் ராமேஸ்வரம், காசி, கேதார்நாத், பத்ரிநாத், திருப்பதி, பூரி ஜெகன்னாதர் ஆலயம் முதலிய திருக்கோவில்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஆன்மீகச் சுற்றுலா செல்வதற்கு ஆண்டுக்கு ஒருமுறை 1 லட்சம் பேருக்கு - தலா ரூ.25 ஆயிரம் வரை நிதியுதவி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தி.மு.க. அரசு 1989-ல் குன்றக்குடி அடிகளார் தலைமையில் அமைத்திருந்த இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக்குழுவின் பரிந்துரையின்படி கோவில்களின் நிர்வாகம் மேலும் சிறப்புடன் நடைபெறுவதற்குத் தகுந்த அதிகாரங்களுடன் கூடிய சட்டரீதியான உயர்நிலை ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் இருக்கிறது. தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வரவேற்கும் திறந்த மனம் கொண்டது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
Tags:    

Similar News