செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்

Published On 2021-03-31 12:11 GMT   |   Update On 2021-03-31 12:11 GMT
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வருகிற 4-ந்தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இன்று முதல் வருகிற 4-ந்தேதி வரை: தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீசுவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

இதன் காரணமாக ஒரு சில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும். பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல் 12.00 முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும், ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

மத்திய அந்தமான் கடல்பகுதியில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றாழ்த்த பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News