செய்திகள்
கோப்புப்படம்

வேலகவுண்டம்பட்டி அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ஜெயிலில் அடைப்பு

Published On 2021-03-26 09:03 GMT   |   Update On 2021-03-26 09:03 GMT
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மனைவி வசந்தி (வயது 41). இவர் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியை சேர்ந்த சுகுமாரன் (72) என்பவர் முதியோர் உதவித்தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலர் வசந்தியிடம் விண்ணப்பம் அளித்துள்ளார். முதியோர் உதவித்தொகை பெற ரூ.4 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் வசந்தி கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சுகுமாரன் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் அறிவுரை வழங்கி ரசாயணம் பூசப்பட்ட ரூபாய் நோட்டுகளை சுகுமாரிடம் கொடுத்து அனுப்பினர். பின்னர் சுகுமார் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் வசந்தியிடம்‌ ரசாயணம் பூசப்பட்ட ரூ.4 ஆயிரத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் வசந்தியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் பிறகு போலீசார், வசந்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
Tags:    

Similar News