செய்திகள்
கோவில்பட்டி காந்திநகரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்.

அ.தி.மு.க. அரசின் நல்லாட்சி தொடர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரசாரம்

Published On 2021-03-20 12:23 GMT   |   Update On 2021-03-20 12:23 GMT
அ.தி.மு.க. அரசின் நல்லாட்சி தொடர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரசாரம் செய்தார்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் பிரசார இடங்களை தேர்வு செய்து காலையிலேயே தொடங்கி விடுகிறார்.

நேற்று காலை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டி காந்தி நகரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக அங்குள்ள காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

அவருடன் கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் வேல்மணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாவட்ட செயலாளர் சவுந்தர்ராஜன், ஒன்றிய மாணவரணி செயலாளர் அல்லித்துரை, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ஒன்றியச் செயலாளர் செண்பகமூர்த்தி, கிளைச் செயலாளர்கள் மாடசாமி, ராமச்சந்திரன், செண்பகராஜ், முருகன், குருநாதன், பாண்டி, கனி, சரவணன், சரண், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், பாரதீய ஜனதா கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி, நகர தலைவர் பாலசுப்பிரமணியன், நகர பொதுச் செயலாளர்கள் முனியராஜ், சீனிவாசன், பொருளாளர் முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கொடிகளை ஏந்தியபடி உற்சாகத்துடன் சென்றனர். கடம்பூர் ராஜூ பிரசாரம் மேற்கொண்ட பகுதிகளில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அந்த பகுதியில் திரண்டு இருந்தவர்கள் மத்தியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு கேட்டு பேசியதாவது:-

நான் ஒவ்வொரு தேர்தலின் போதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டுதான் எனது பிரசாரத்தை ஆரம்பிப்பேன். அதுபோல் தான் இந்த தடவையும் கழுகுமலையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டுதான் தொடங்கினேன். கோவில்பட்டி நகருக்குள் வாக்கு சேகரிக்க வரும்போது முதன் முதலில் காந்தி நகர் பகுதியில் தான் வாக்கு சேகரிப்பேன். அப்படிதான் இப்போதும் வந்து இருக்கிறேன். உங்களுக்கு தொண்டாற்ற எனக்கு வழங்கி உள்ள வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்துவேன். எனக்கு காளியம்மன் ஆசியும், உங்கள் ஆதரவும் இருக்கிறது. பிறகு எதற்கு பயப்பட வேண்டும்.

என்னை பொறுத்தவரை நான் உங்கள் வேட்பாளர். இந்த தொகுதியிலேயே குடியிருப்பவன். நான் பதவிக்கு வந்தபின் என்னை மாற்றிக்கொள்ளவில்லை. எம்.எல்.ஏ.ஆவதற்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படிதான் இப்போதும் இருக்கிறேன். எந்த நிலையிலும் தன்னிலை மாறாமல் எனது பணி இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கையின்போது இந்த பகுதி வாக்குகளில் இரட்டை இலை தான் முன்னிலையில் இருக்கும். கடந்த 2 தேர்தல்களில் பார்த்து விட்டேன். எனக்கு சாதி, மத வித்தியாசம் தெரியாது. எல்லோரையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன். இந்த தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்று பட்டு இருக்கிறோம். நான் யாரிடமும் வேறுபாடு காட்டமாட்டேன்.

உலகம் முழுவதும் கொேரானா காலத்தில் எல்லா துறைகளும் முடங்கி கிடந்தது. அப்போது நமது முதல் -அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நலத்திட்டங்களை அறிவித்தார். நாங்கள் தொகுதி முழுவதும் வந்து பார்வையிட்டு தேவையான நடவடிக்கை எடுத்தோம். ஆனால் எதிர்கட்சியினர் யாரும் வரவில்லை. இப்போதுதான் வருகிறார்கள். கொரோனா பாதித்த 39 மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்திய ஒரே முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். அதனால் தான் நமது மாநிலத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.

சொன்னதை செய்யும் கட்சி அ.தி.மு.க. தான். எனவே நடைபெற இருக்கும் தேர்தலையொட்டி அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் தேர்தலுக்கு பிறகு எங்கள் ஆட்சி அமைந்த பிறகு 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும். இந்த ஆட்சி சீரோடும் சிறப்புடனும் தொடரவேண்டும். அதற்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சரமாரியம்மன் கோவில் தெரு, சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், புதுகிராமம் பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
Tags:    

Similar News